Pages

 • 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

  "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

 • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

  நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

 • காசும் கல்வியும்...

  பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

 • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

  மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

 • முதலாளி...

  மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

வடக்குப்பட்டி ராமசாமியும், வடகொரியப்போரும்... (சிறுகதை மாதிரி)

Saturday, April 6, 2013 1 comments

காலையில் கண்விழித்துப் பார்த்தபோது எங்கள் வீட்டைச்சுற்றிலும் எங்களையே குறிவைத்து பளபளப்பான துப்பாக்கிகளை கையிலேந்தி நின்றுகொண்டிருந்தது ஒரு ரவுடிக்கூட்டம். சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தால், அண்டைவீட்டு மக்களெல்லாம் கண்டும்காணாமல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டை சுற்றி வளைத்திருக்கிற ரவுடிகளுக்கு என்னதான் வேண்டுமென்றும் தெரியவில்லை. வீட்டின் வாசலருகே வந்தாலோ அல்லது என்ன? ஏது? என்று விசாரித்தாலோ, ஆயுதங்களால் எங்களைத் தாக்கிவிடுவார்களோ என்கிற அச்சமிருந்தது. அதனால் வெளியே செல்லமுடியாமல் உள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கொள்ளையர்கள் என்பதும், அதிலும் மிக வித்தியாசமான கொள்ளையர்கள் என்பதும் பின்னர் என் மனைவி சொல்லித்தெரிந்துகொண்டேன்.

வீடுவீடாகச் சென்று வீட்டுடைமையாளர்களை மிரட்டி, அவ்வீட்டையே தங்கள் பெயருக்கு எழுதி வாங்கிவிடுவார்களாம். இவர்களுக்கு பயந்து சில வீட்டுக்காரர்கள் தாமாகவே முன்வந்து எல்லாவற்றையும் எழுதிக்கொடுத்துவிட்டு அவர்களுடைய அடிமைகளாகவோ கூட்டாளிகளாகவோ மாறிவிடுவார்களாம். ஏற்கனவே கிழக்குத்தெரு மற்றும் தெற்குத்தெருக்களில் ஏராளமான வீடுகளை பிடித்துக்கொண்டார்களாம். இப்போது வடக்குப்பட்டி வரை வந்திருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்தோம். எங்களுடைய கடும் உழைப்பில் உருவான இவ்வீட்டை எவனோ ஒரு திருட்டுப்பயலுக்கு ஏன் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியினை எங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொண்டோம். இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே என எண்ணிக்கொண்டு, அதுவரையில் வெளியே போகாமல் வீட்டில் இருப்பதை சாப்பிட்டு சமாளிக்கலாம் என முடிவெடுத்தோம்.

நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்பு என்பதால், எங்களது வீட்டு சன்னலை திறந்து அடுத்த வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்கலாம் எனநினைத்தோம். சன்னலைத்திறந்தால் பக்கத்துவீட்டுக்காரரின் சன்னலிலிருந்தும் அவர்களின் அனுமதியோடு ஒரு துப்பாக்கி எங்களை முறைத்தது. என்ன செய்வதென்றே தெரியாமல், சன்னல் மற்றும் அனைத்து கதவுகளையும் வேகமாக மூடினோம்.
"வடக்குப்பட்டி ராமசாமி வீட்டில் இருக்கிற யாருக்கும் சுதந்தரமே இல்லை. அங்க பாரு, வீட்டின் எல்லாக் கதவுகளும் மூடியிருக்கு" என்று வெளியே யாரோ பேசிக்கொள்வது எங்கள் காதுகளுக்கு வந்துசேர்ந்தது. அதன்பிறகு ஒன்றிரண்டு சன்னல்களை மட்டும் திறந்து வைத்தோம்.

பயம் ஒருபுறமிருந்தாலும், பசிக்கு இப்பிரச்சனைகள் எல்லாம் தெரியாதே. அதனால் சமைலறைக்குள் சென்று சாம்பார் வைக்கத்துவங்கினேன். சிறிதுநேரம் கழித்து வெளியே டமார் என்கிற சத்தம் கேட்கவே கையில் சாம்பார் கரண்டியுடன் ஓடிவந்து பார்த்தால், ரவுடிகளில் ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பூந்தொட்டியினை உடைத்திருந்தான். எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றேன்.
"வடக்குப்பட்டி ராமசாமி வீட்டில் இருக்கிறவங்க பயங்கரமான ஆயுதங்களை எல்லாம் கையில் வெச்சிருக்காங்க... இப்பதான் அந்தவீட்டுத் தலைவர் வெளியே ஒரு ஆயுதத்தோட வந்தார். நான் பாத்தேன்" என்று மீண்டும் வெளியே யாரோ பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது.

சமையலை முடித்து, சாப்பிட உட்கார்ந்தோம். கைதவறி ஒரு பீங்கான் தட்டு கீழே விழுந்துடைந்து பெரும் சத்தத்தை எழுப்பியது. யாரும் யார்மீதும் கோபப்படாமல், வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தோம்.
"வடக்குப்பட்டி ராமசாமி ஒரு கொடுமைக்காரர். அவரோட வீட்டில் இருக்கிறவங்களை தடியால் அடித்து துன்புறுத்துராராம். வெளியே சொல்லமுடியாத அளவிற்கு வீட்டுக்குள்ளேயே பல கொடுமைகள் நடக்குதாம்." என்று மீண்டும் ஒரு குரல் சொல்லியது வெளியே.
இனியும் பொறுப்பதற்கில்லை. ஒரு கை பார்த்துவிடவேண்டியதுதான். சட்டையை மடித்துக்கொண்டு சண்டைக்கு தயாரானோம். ஆனால், சாம்பாருக்குத் தேவையான பொருட்கள் என்னவென்று அறிந்திருந்தோமே தவிர, சண்டைக்குத் தேவையான பொருட்கள் பற்றி அறிந்துவைத்திருக்கவில்லை. வீடுமுழுக்க தேடிப்பார்த்ததில், தாக்குவதற்கு தாத்தாவின் பழைய தடியும், தடுப்பதற்கு இட்லிகுண்டான் மூடியும்தான் கிடைத்தது.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக எல்லோரும் வாசல்வரை வந்து, "என்னடா வேணும் உங்களுக்கு? நீங்க தாக்குனா, நாங்களும் தாக்குவோம்." என்று கோபம்கொப்பளிக்கச் சொன்னோம்.
"வடக்குப்பட்டி ராமசாமி நாம எல்லாரையும் தாக்கப்போறதா திமிர்தனமா அறிவிச்சிருக்காரு. கையில் மிகப் பயங்கரமான ஆயுதங்கள் வேற வெச்சிருக்காரு. ஊரே பயந்துகிடக்கு. இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?" என்று மீண்டும் ஒலித்தது பொய்த்தகவல் தாங்கிய பொய்க்குரல்.

இது என்ன மிகப்பெரிய அநியாயமா இருக்கே! அடுத்தவன் வீட்டு வாசலில் அதிரடியாக புகுந்து துப்பாக்கிகளோடு நிற்பவர்களைக் கண்டுகொள்ளாமல், தட்டு விழுந்ததை தடியடி நடந்ததாகவும், கரண்டியோடு வந்தவனை ஆயுதத்தோடு வாரான்னு சொல்வதும் உச்சகட்ட மோசடியாக அல்லவா இருக்கிறது.

நாங்கள் தடியுடன் முன்னேற, எங்களுடைய கோபத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல துப்பாக்கி குண்டுகளை எங்களை நோக்கி செலுத்த ஆயத்தமானார்கள் ரவுடிகள். இதற்குமேல் இந்த சண்டை நடக்குமா? நடக்காதா? யார் வெற்றிபெறுவார்கள்? தோல்வியுரப்போகிறவர் என்னவாவார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதிலில்லாமல் போனாலும், இச்சூழலின் பின்வரலாற்றை உலகம் அறிந்தாலே போதும் என்பதாலேயே எழுதுகிறேன்...

இப்படிக்கு,
திணிக்கப்பட்ட சண்டைக்குத் தயாராகும் வடக்குப்பட்டி ராமசாமி
(பின்குறிப்பு: வடக்குப்பட்டி ராமசாமியை வடகொரியாவிற்கும், பக்கத்துவீட்டை தென்கொரியாவிற்கும், கொள்ளையர்களை அமெரிக்காவிற்கும் ஒப்பிட்டுப்பார்த்தீர்களானால் நிச்சயமாக அதற்கு நான் தான் பொறுப்பு)


---இ.பா.சிந்தன்ஆப்கன் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' (பகுதி-1)

Friday, October 26, 2012 0 comments

பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசியும் எழுதியும் வந்த பாகிஸ்தானின் 15 வயது 'மலாலா'வின் மீது, மத அடிப்படைவாத தாலிபான்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம்...

யார் இந்த தாலிபான்கள்? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்துவந்திருக்கிறார்கள்? என்பதையெல்லாம் அறிந்துகொண்டால், மலாலாவின் இந்த நிலைக்கும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாட்டுப் பெண்கள் சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சனைகளின் வேர்கள் எவை என்றும் நாம் புரிந்துகொள்ளமுடியும்...

ஆப்கானின் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' என்கிற பெண்ணின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில பகுதிகளை அறிவதன் மூலமாகவே, நாம் ஆப்கானிஸ்தானின் நிலையினை அறிந்து கொள்ளமுடியும்....
கட்டுரைத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன், ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்திருக்கிற அமெரிக்க-நேட்டோ படைகளின் போரினை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, 'மலாலாய் சோயா' வெளியிட்ட அறிக்கையினை வாசிப்போம்... 


"என் மதிப்பிற்குரிய நண்பர்களே,

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 'பெண்ணுரிமை, மனிதவுரிமை மற்றும் ஜனநாயகத்தை காப்போம்' என்று சொல்லிக்கொண்டு, அமெரிக்காவும் நேட்டோ படையும் எங்களது ஆப்கான் நாட்டை படையெடுத்து வந்தார்கள். ஆனால் பத்தாண்டுகள் ஆகியும், நிலைமை சரியாகவில்லையென்பதை விட போரினால் மிகவும் மோசமடைந்து ஊழல் மலிந்த நாடாகத்தான் ஆகியிருக்கிறது ஆப்கானிஸ்தான். கடுமையான குற்றங்களும், காட்டுமிராண்டித்தனமான செயல்களும், மனிதவுரிமை மற்றும் பெண்ணுரிமை மீறல்களும் தான் இப்போர் எங்களுக்குத் தந்திருக்கிறது. எங்களது துயரங்களையும் துன்பங்களையும் இது இரட்டிப்பாக்கியிருக்கிறது.

இக்குரூரமான காலங்களில், அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளாலும் உள்நாட்டுத் தீவிரவாத குழுக்களாலும், போருக்கு சற்றும் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒபாமா 2008 இல் பதவியேற்றபின்னர், எங்களது நாட்டின்மீதான போரினை நிறுத்துவதற்கு பதிலாக, அதனை மேலும் வீரியப்படுத்தினார். அதனால் அதன்பிறகு, பொதுமக்களின் சாவு எண்ணிக்கை 24% அதிகரித்தது. ஆக்கிரமிப்பு படைத்துருப்புகளின் எண்ணிக்கையினை அதிகரித்தமையால், குற்றங்களும் கொடூரத்தாக்குதல்களும் கொடுமைகளும் வலியும் ஆப்கான் மக்களாகிய எங்களுக்கு கூடியது.  ஜார்ஜ் புஷ்ஷைவிடவும் ஆபத்தானவராக எங்களுக்குத் தென்படுகிறார்.

2010 இல் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று 'ஆப்கானிஸ்தான் உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தின்' ஆய்வறிக்கை சொல்கிறது. 2014 இல் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என்று அமெரிக்கா மற்றும் நேட்டோ அறிவித்திருக்கின்றன, ஆனால் அமெரிக்காவோ சத்தமில்லாமல் ஆப்கானிஸ்தானில் நிரந்தரப் படைத்தளங்களை அமைத்துவருகிறது. அமெரிக்க-ஆப்கான் அரசுகளிடையே 2024 வரையிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களும் போடப்பட்டிருக்கின்றன.  இதிலிருந்து, எங்களது நாட்டை விட்டு விரைவில் வெளியேறும் எண்ணமே அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. ஆப்கானிஸ்தானின் பூகோள முக்கியத்துவத்தை பயன்படுத்தி, சீனா உள்பட ஆசியநாடுகளைக் கண்காணிக்கிற கட்டுப்பாட்டுத் தளமாக்கத்தான் முனைகிறது அமெரிக்கா. இதனைச் செய்துகொண்டே எங்களது நாட்டின் எண்ணைவளம், கனிமவளம் உள்பட அனைத்தையும் அவர்கள் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.


ஆப்கான் மக்களை மட்டுமல்லாமல், அவர்களது சொந்தநாட்டு மக்களையும் சேர்த்தேதான் ஏமாற்றுகிறார்கள். மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுகிற வகையிலும், ஆப்கானின் தீவிரவாத குழுக்களுக்கு உதவுகிறவகையிலும், மேற்குலக நாட்டு மக்களின் வரிப்பணத்தையும் இராணுவ வீரர்களின் இரத்தத்தையும் அவ்வரசுகள் பயன்படுத்தி வருகின்றன.
இராணுவ படையெடுப்பின் மூலமாக ஜனநாயகத்தை எப்போதும் உருவாக்கிவிடமுடியாது என்றே நான் நினைக்கிறேன். சுதந்திரமும் நீதியும் நியாயமும் இல்லாத ஜனநாயகம் அர்த்தமற்றது தான். நாட்டு மக்களால்தான், விடுதலையினை தீர்மானிக்கமுடியும். அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறினால்தான், மிகக்கொடுமையான சூழலிலிருக்கிற எங்களது நாட்டு விடுதலைக்காக எங்களால் சரியான திசையில் போராடமுடியும். அமைதிக்கான நியாயத்திற்கான எங்களது போராட்டத்தை அவர்களது இருப்பு மேலும் குழப்பத்திற்குள்ளாக்குகிறது. ஆப்கானைவிட்டு அவர்கள் வெளியேறிவிட்டாலே, தாலிபான் மற்றும் இன்னபிற மத அடிப்படைவாதக் குழுக்களின் அடித்தளம் நிச்சயமாக உடைந்துவிடும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் ஃபரா என்கிற இடத்தில், நேட்டோ நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில், போருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத 150 அப்பாவி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக ஒரேயிடத்தில் கொல்லப்பட்டனர். பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் பெண்களுமே அக்குண்டுவெடிப்பில் இறந்தனர். இதுதான் ஆப்கானிஸ்தான் போரின் உண்மைநிலை. இதைத்தானே நேடோ படை உலகெங்கிலும் செய்துவருகிறது. ஆப்கானிஸ்தானில் அவர்களை தொடர அனுமதித்தால், மத்தியகிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என அவர்களது அட்டூழியம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்...

அடிப்படைவாதம், தாலிபான், முஜாகிதீன்கள் போன்ற பல பிரச்சனைகள் எங்களது நாட்டில் இருக்கின்றன. எங்களுக்கு சுதந்திரமும், சுயநிர்ணய உரிமையும் இருந்தால்  இப்பிரச்சனைகளையெல்லாம் தீர்ப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, உலகின் வேறெந்த நாட்டிலும் நேட்டோவின் குண்டுகளால் ஜனநாயகத்தை கொண்டுவந்துவிடமுடியாது.

பிற மத்திய கிழக்கு நாடுகளில் துவங்கியிருக்கிற எழுச்சியைப்போன்றே ஆப்கானிஸ்தானிலும் நிகழும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஹெராத், நன்கர்கார், மாசர்-இ-ஷரிப், ஃபரா, காபுல் மற்றும் சில மாகாணங்களில் ஆங்காங்கே சிறியளவில் நடக்கிற மக்கள் எழுச்சிதான் ஆப்கானிற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறதென்கிற நம்பிக்கையினை காப்பாற்றிவருகிறது.

அடிப்பதைவாதத்தையும் ஆக்கிரமிப்பையும் ஒருசேர எதிர்க்கும் எங்களது நாட்டின் ஜனநாயக விரும்பிகளுடன் கைகோர்க்குமாறு உலகெங்கிலுமுள்ள அமைதிவிரும்பிகள், போரெதிர்ப்பு இயக்கங்கள், ஜனநாயக விரும்பிகள் ஆகியோரை கேட்டுக்கொள்கிறேன்."

(தொடரும்.....)

 -இ.பா.சிந்தன்ஆப்பிரிக்காவின் 'சே' - தாமஸ் சங்கரா (Burkina Faso Film)

Wednesday, August 15, 2012 0 comments


மனித இனம் இன்று பல இனங்களாகவும், நாடுகளாகவும் மற்றும் இன்னபிற குழுக்களாகவும் பிரிந்து கிடக்கிறது... இப்படி பல தேசங்களை உருவாக்கி எல்லைக் கோடுகளுக்குள் புகுந்துகொண்டிருக்கும் மனித இனம், முதன்முதலில் தோன்றி வளர்ந்த பூர்வீக பூமியாக இன்றளவும் கருதப்படுவது ஆப்பிரிக்க மண்ணைத்தான்...
அந்த ஆப்பிரிக்க மண்ணின் தேசங்கள், பல நூற்றாண்டுகளாக காலனிய நாடுகளாக அடிமைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன... பிரெஞ்சு, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், போர்ச்சுகல், ஜெர்மனி என ஆப்பிரிக்காவை ஆண்டு அடிமைப்படுத்தி சுரண்டிக்கொழுத்த மேற்குலக நாடுகளின் எண்ணிக்கை அதிகம்... இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான காலகட்டத்தில், ஒவ்வொரு ஆப்பிரிக்க நாடாக விடுதலை பெற்றுவந்தன. ஆனால் அவையெல்லாம் உண்மையான விடுதலையல்ல. ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டோம் என்று உலகிற்கு அறிவித்துவிட்டு, அங்கே போலியாக ஒரு பொம்மை ஆட்சியை/ஆட்சியாளர்களை அமர்த்தி, தன்னுடைய காலனிய ஆட்சியினை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவந்தன ஆதிக்க நாடுகள்... தப்பித்தவறி தங்களின் கட்டளைகளை ஏதேனும் ஒரு ஆப்பிரிக்க பொம்மை ஆட்சியாளர் மீறினால், அங்கே உடனடியாக ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெறும்... இப்படித்தான் கடந்த 50 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பெரும்பாலான ஆப்பிரிக்க கண்டத்தினை தொடர்ந்து மறைமுகமாக ஆட்சி நடத்திவருகின்றன ஆதிக்க நாடுகள்...

இதனை எதிர்த்து ஓரிருவர் ஆங்காங்கே குரல் கொடுத்திருக்கிறார்கள்... அவர்களில் மிக முக்கியமான ஒருவர், மேற்குல ஆதிக்க நாட்டினை தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லால், மக்களுக்கான ஒரு மாற்று அரசையும் அமைத்தார்... உலகின் ஏழ்மையான நாடாக சோற்றுக்கே வழியின்றி இருந்த அவரது நாட்டினை, மிகச்சிறிய காலத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி, உலகையே திரும்பிப்பார்க்க வைத்தார். அவரது பெயர் தாமஸ் சங்கரா. அந்நாட்டின் பெயர் புர்கினா பாசோ. தாமஸ் சங்கராவின் வாழ்க்கையினை 'The Upright Man' என்கிற பெயரில் ஆவணப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் 'Robin Shuffield'.

புர்கினா பாசோ - ஒரு வரலாற்றுப் பார்வை


"அப்பர் வோல்டா" என்கிற நாடு மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு. அந்நாட்டின் மேற்கே மாலியும் தெற்கே ஐவரி கோஸ்டும் சூழ்ந்திருக்கிற, கடலில்லா நாடுதான் "அப்பர் வோல்டா". 1896 இல் அப்பர் வோல்டாவினை ஆக்கிரமித்து, காலனிய நாடாக அடிமைப்படுத்தியது பிரெஞ்சு அரசு. அன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பர் வோல்டாவினை தொடர்ந்து ஆண்டுவந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான அழுத்தத்தில், மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே 1960 இல் பிரெஞ்சு அரசிடமிருந்து அப்பர் வோல்டா நாடும் விடுதலை பெற்றது. ஆனாலும் பிரெஞ்சு அரசிற்கு தலையசைக்கும் பொம்மை இராணுவ ஆட்சிகள்தான் மாறிமாறி அப்பர் வோல்டாவினை ஆண்டுவந்தன. நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரெஞ்சு காலனியாக இருந்துவந்த அப்பர் வோல்டாவில் சொல்லிக்கொள்ளும்படி கனிவளங்களோ கடலோ இல்லாமையால், அப்பர் வோல்டா மக்களை அண்டைய நாடுகளில் கூலி வேலை பார்ப்பதற்கு பயன்படுத்திவந்தன பிரெஞ்சு அரசும், பொம்மை இராணுவ அரசுகளும்.
அவ்வப்போது ஆட்சிக்கவிழ்ப்புகளும், சதிப்புரட்சிகளும் நடந்துகொண்டே இருந்தன. 1983 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியினை கவிழ்த்து, மக்கள் புரட்சியின் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் இளம் அதிபராக ஆட்சிக்கு வருகிறார் தாமஸ் சங்கரா. பிரெஞ்சு காலனிய நாடாக இருந்தபோது வைக்கப்பட்ட "அப்பர் வோல்டா" என்கிற பெயரினை "புர்கினா பாசோ" என்று பெயர்மாற்றம் செய்கிறார். தன்னுடைய சுய இலாபத்திற்காகவும் மேற்குலக நாடுகளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டும் தன்னுடைய சொந்த நாட்டுமக்களையே சுரண்டும் ஆப்பிரிக்காவின் மற்ற பெரும்பான்மையான ஆட்சியாளர்களைப்போல அல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார் தாமஸ் சங்கரா.புரட்சியின் பாதையில் மக்கள்நல திட்டங்கள்...:

புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு இராணுவ வீரனாக இருந்தபோது, மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார் தாமஸ் சங்கரா. ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களினால் மக்களுக்கு எவ்விதப் பயனுமில்லை என்பதையும் மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்தும் ஒரு புரட்சிகர அரசுதான் எல்லாவற்றையும் புரட்டிப்போடமுடியும் என்றும் புரிந்துகொண்டார்.

அப்பாடங்களை அதிபரானபோது, ஒவ்வொன்றாக செயல்படுத்தினார் தாமஸ் சங்கரா. நாட்டின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் மிக அதிகமான ஊதியத்தினை குறைத்ததோடல்லாமல் தன்னுடைய ஊதியத்தையும் குறைத்து சட்டமியற்றினார் சங்கரா. அமைச்சர்களும், உயரதிகாரிகளும் வளம் வந்துகொண்டிருந்த அரசுக்கு சொந்தமான மெர்சிடிஸ் கார்களை விற்றுவிட்டு, புர்கினா பாசோவின் மிக மலிவான கார்களையே பயன்படத்தவேண்டுமெனவும் உத்தரவிட்டார். அதனை தன்னிலிருந்தே துவங்கினார்.
தாமஸ் சங்கரா: "அரசு அலுவல் காரணமாக விமானத்தில் பயணிக்கும் அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல்வகுப்பில் செல்லாமல் சாதாரண வகுப்பில்தான் பயணிக்க வேண்டும். நீங்கள் முதல் வகுப்பில் சென்றாலும், சாதாரண வகுப்பில் சென்றாலும் விமானம் தரையிறங்குகிறபோது ஒன்றாகத்தானே இறங்கப்போகிறீர்கள்? விமானம் கிளம்பும்போதும் ஒன்றாகத்தானே பயணிக்கப் போகிறீர்கள்? பிறகு எதற்கு முதல் வகுப்பு? அதனால் சொகுசாக பயணம் செய்வதற்காக, மக்களின் வரிப்பணத்தை இனி விரயம் செய்யக்கூடாது."

விவசாயிகளுக்கு சுமையாக காலனியாட்சிக்காலத்திலிருந்து வசூலிக்கப்பட்டுவந்த விவசாயவரி இரத்து செய்யப்பட்டது. விவசாயத்தினை உற்சாகமாக தொடர்ந்த நடத்த, இச்சட்டம் ஊக்கமாக அமைந்தது.
பன்னிரண்டு வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்கு மக்களுக்கான அரசியலைக் கற்றுக்கொடுக்கிற திட்டமும் உருவாக்கப்பட்டது. எதிர்காலத்தில் புர்கினா பாசோ நாட்டினை ஆளப்போவதே அவர்கள்தான். எனவே அவர்ளுக்கு நாட்டின்மீதும், மக்களின்மீதும் பற்றினை உருவாக்குவதும், தன்னலமற்ற குடிமக்களாக வளர்க்கவேண்டியதும் ஒரு அரசின் கடமையென தாமஸ் சங்கரா நினைத்தார்.
தாமஸ் சங்கரா: "தேசியக்கொடியின் கீழ்நின்றுகொண்டு, மனிதவுயிர்களைக் கொல்லும் ஆயுதங்களைக் கையில் ஏந்திக்கொண்டு, தமக்குப் பிறப்பிக்கப்படுகிற உத்தரவுகளை அப்படியே பின்பற்றி அவ்வாயுதங்களை பயன்படுத்துவதால் யார் பயனடைவார்கள் என்றுகூட அறியாத நிலையில் இருக்கிற இராணுவ வீரனும் தீவிரவாதிதான்."

பெண்ணுரிமைக்காக...

ஆட்சியின் முதலாண்டில் பல்வேறு பொருளாதார மாற்றங்களைக்கொண்டு வந்த தாமஸ் சங்கரா, மக்களிடையே மாற்றுக் கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் செல்லவேண்டுமென எண்ணினார். ஆப்பிரிக்க சமூகத்தில் பெண்களை எப்போதும் ஆண்களே மேலாதிக்கம் செலுத்திவந்தனர். இதனை மாற்றவேண்டுமென்று மக்களிடையே வலியுறுத்தினார்.
தாமஸ் சங்கரா: "நம் நாட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேலை கிடைக்க நாம் உதவவேண்டும். சுயமாக சம்பாதித்து நல்லதொரு வாழ்க்கையினை அமைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நம் நாட்டுப் பெண்களுக்கு நாம் அமைத்துத்தரவேண்டும்."
அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டுமென்று பேசி ஆப்பிரிக்க கண்டத்தில் அதிர்வலைகளை உண்டாக்கினார்.

பள்ளிகளில் பெண்களுக்கான சமவுரிமையும் சுதந்திரமும் எந்த அளவில் சாத்தியமென்று நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு பதிலளிக்கையில்,
"'பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு கீழ்தான்' என்று காலம் காலமாக நமக்கு சொல்லித்தரப்பட்டு வருகிறது. அந்த எண்ணத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் ஒரு பெண் கருவுற்றுவிட்டால், உடனே அப்பெண்ணை பள்ளியிலிருந்து நீக்கிவிடுகிற பழக்கமிருக்கிறது. ஆனால் அதற்கு காரணமான ஆண் அதே பள்ளியில் அதே வகுப்பில் இருந்தாலும், அவனுடைய படிப்பு பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறோம். ஆக, எத்தனை பெண்கள் கருவுறக் காரணமாக ஒரு ஆண் இருந்தாலும், அவனுக்கு எவ்வித இழப்புமில்லை. ஆனால், பெண்ணோ கல்வியை இழந்து, சமூகத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கையைத் தொலைக்கிறநிலைதான் தொடர்கிறது. இந்நிலையினை மாற்ற வேண்டும்."

புரட்சிக்கு பின்னான காலகட்டத்தில், நாட்டின் அரசியல் நடவடிக்கைகளில் பெண்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஆண்களுக்கு நிகராக, பெண்களும் தேச வளர்ச்சிக்கு உதவ பெண்கள் வருவதைக் காணமுடிந்தது. பல பெண்கள் தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர். ஆயுதங்களைக் கையாள்வது, இராணுவ சீருடை அணிவது, அணிவகுப்பு நடத்துவது போன்ற ஆண்கள் செய்கிற இராணுவ வேலைகள் அனைத்தையும் பெண்களும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண்களை அமைச்சர் பதவிக்கு நியமித்த முதல் ஆப்பிரிக்க அதிபர் தாமஸ் சங்கராவாகத்தான் இருக்கமுடியும்.
லிடியா டிரவோரே (பள்ளி ஆசிரியை): "உலக பெண்கள் தினமான மார்ச் 8 இல், பெண்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டுமென்றும், ஆண்கள்தான் அன்றையதினம் வீடு வேலைகளையும் வெளியே சென்று காய்கறிகள் வாங்குவதையும் செய்யவேண்டுமென்று வேண்டுகோள்விடுத்தார். அன்றைய தினம், ஆண்களே கடைக்கு சென்று தக்காளி வாங்குவதும், வீட்டிற்குவந்து சமைப்பதையும் பார்க்க அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது."

பொருளாதார மாற்றங்கள்...

புர்கினா பாசோ மக்களனைவருக்கும் உணவு, வீடு, மருத்துவ வசதி ஆகியவையே கிடைக்கச் செய்யவேண்டுமென்பதே தாமஸ் சங்கரா அரசின் தலையாய கடமையாக இருந்தது. 

பல்வேறுவிதமான நோய்கள் ஆப்பிரிக்க கண்டம் முழுக்க பரவிக்கொண்டிருந்த சமயத்தில், புர்கினா பாசோவில் ஒரே வாரத்தில் 25 லட்சம் மக்கள் போலியோ உட்பட பல நோய்களுக்கான தடுப்புமருந்து கொடுக்கப்பட்டது. இந்நடவடிக்கை, உலக சுகாதார அமைப்பின் பாராட்டுதலையும் பெற்றது.

விளையாட்டுத் துறையிலும் நாட்டினை முன்னேற்ற வேண்டுமென்று முன்னுதாரண நடவடிக்கையாக, சங்கராவும் அவரது அமைச்சர்களுமே நேரம் கிடைக்கிறபோதெல்லாம் கிராம மக்களோடு இணைந்து விளையாடி வந்தனர்.
ஆப்பிரிக்க நிலங்கள் பாலைவனமாக மாறுவதனை தடுக்க, நாடுமுழுக்க விரவிக்கிடந்த தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நாடும் திட்டத்தினையும் துவங்கிவைத்தது சங்கராவின் அரசு. கிராமத்து இளைஞர்களை வைத்து, ஆங்காங்கே தோப்புகளை உருவாக்கினர்.

நகரங்களில் வீடில்லாமல் வாழ்ந்த மக்களுக்கு, அரசு செலவிலேயே ஆங்காங்கே வீடுகளமைத்து கொடுக்கப்பட்டன. நகரங்களோடு கிராமங்களை இணைக்க பெரும்பாலும் சாலைகளே இல்லாதகாரணத்தால், அதே திட்டத்தினை கிராமங்களுக்கும் கொண்டுசெல்ல முடியாமற்போயிற்று. கிராமங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்குமுன், சாலைகளையும் இரயில் தண்டவாளங்களையுமே முதலில் அமைக்கவேண்டுமென்று முடிவெடுக்கிறது சங்கராவின் அரசு. ஆதாயமின்றி உதவ உலகவங்கியோ மேற்குலக நாடுகளோ முன்வராது என்பதனை நன்குணர்ந்த சங்கரா, நாட்டு மக்களையே உதவிக்கு அழைக்கிறார். அதன்படி, புர்கினா பாசோவின் தென்கோடியையும் வடகோடியையும் இணைக்கும் இரயில் பாதையினை எந்தவொரு நாட்டின் உதவுமின்றி சொந்த மண்ணின் மக்களுடைய உழைப்பிலேயே சாத்தியமாக்கிக்காட்டினர்.

வேளாண்துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக...

புர்கினா பாசோவினை ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றவேண்டுமென்பதே தன்னுடைய அடுத்த குறிக்கோளாக இருந்தது புரட்சி அரசிற்கு. தங்களுடைய நாட்டில் தயாரித்த பொருட்களையே வாங்கிப் பயன்படுத்துமாறு, நாட்டுமக்களுக்கு அறிவுறுத்தினார் சங்கரா.
தாமஸ் சங்கரா: "தற்போது நம்மால் நமக்கு தேவையான அளவிற்கு உணவு உற்பத்தி செய்யமுடிகிறது. நம்முடைய தேவைக்கு அதிகமாகவும், நம்மால் உற்பத்தி செய்ய முடியும். முறையான ஒருங்கிணைப்பு இல்லாமையால், இன்றும் நாம் அயல்நாடுகளிடம் கையேந்த வேண்டியிருக்கிறது. ஆனால் அவ்வுதவிகள் யாவும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, உதவிக்காக பிச்சையெடுக்கிற நிலையில்தான் இருக்கிறோம் என்கிற எண்ணத்தினை நம்முடைய மனதில் ஆழமாக பதியவும் வைத்துவிட்டன. ஏகாதிபத்தியம் எங்கிருக்கிறது என்று என்னிடத்தில் சிலர் கேட்கிறார்கள். நீங்கள் சாப்பிடுகிற தட்டினை பார்த்தாலே அதற்கான பதில் கிடைக்கும். நாம் சாப்பிடுகிற அரிசி, சோளம், தினை என அனைத்துமே இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்தான். அக்கேள்விக்கான பதிலினை இதற்கு மேலும் வேறெங்கும் தேடவேண்டிய அவசியமில்லை"

இதனை மனதில் வைத்துக்கொண்டு காலம்காலமாக நிலத்தின்மீது ஒட்டுமொத்தமாக உரிமைகொண்டாடிவந்த நிலக்கிழார்களிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு உழுபவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. நிலச்சீர்திருத்தம், விவசாயவரி நீக்கம் உட்பட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டமையால், இரண்டு ஆண்டிற்குள் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றநாடாக புர்கினா பாசோ மாறியது. சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 1700 கிலோ கோதுமை பயிர்செய்யும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடுகையில், ஒரு ஹெக்டேருக்கு 3800 கிலோ கோதுமையினை உற்பத்தி செய்யும் திறன்வாய்ந்த நாடாக உருவெடுத்தது புர்கினா பாசோ. பசி, பஞ்சம் போன்ற வார்த்தைகளை நாட்டேவிட்டே விரட்டிவிட்டனர்.

உள்நாட்டு நெசவுத்தொழில் நசிந்துகிடக்கிற நிலையினை மாற்ற, மிகப்பெரிய சமூக இயக்கம் துவங்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அனைவரும், சொந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆடைகளையே அணியவேண்டுமென்று உத்தரவு போடப்பட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் தயாரித்த ஆடைகளையே அணியுமாறு நாட்டு மக்களிடையே கோரிக்கை வைக்கப்பட்டது. தாமஸ் சங்கராவும் உள்ளூர் நெசவாளர்கள் தயாரித்த ஆடையினையே எப்போதும் அணிந்தார்.

தாமஸ் சங்கராவின் திட்டங்கள் அனைத்தும், கானா போன்ற அண்டைய ஆப்பிரிக்க நாடுகளையும் ஈர்த்தன. இதனைக் கண்டு அஞ்சிய பிரெஞ்சு அரசு, தன்னுடைய முன்னாள் காலனிய நாடுகளனைத்தையும் அழைத்து மாநாடொன்று நடத்தியது. ஆப்பிரிக்க நாடுகளனைத்தும் மேற்குலகிற்கு அடிபணிந்துதான் நடக்கவேண்டுமென்று அம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரெஞ்சு அதிபர் மறைமுகமாக எச்சரிக்கையும் விடுக்கிறார். தாமஸ் சங்கரா அதனை நேரடியாகவே மறுக்கிறார்.

ஆப்பிரிக்க நாடுகளின் கடனை இரத்து செய்யும் கோரிக்கை...

ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தாமஸ் சங்கரா,
"இன்றைக்கு நமக்கு யாரெல்லாம் கடன் கொடுக்கிறார்களோ, அவர்கள்தான் நம்முடைய நாடுகளை முன்பு அடிமைப்படுத்தி ஆண்டுவந்தார்கள். கடன்பெற்று வாழ்கிற நிலைமைக்கு நம்முடைய நாடுகள் சென்றதற்கு, அவர்களின் சுரண்டலே காரணம். இங்கிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டே இருந்தார்கள், ஆனால் எதையும் செய்யவில்லை நமக்கு. நம்மை ஆண்டுவந்த அவர்கள்தான் கடன்வாங்குவதை துவக்கியும் வைத்தார்கள். நமக்கு இந்த கடனுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அதனால் நம்மால் இந்தக்கடன்களையெல்லாம் திருப்பிச்செலுத்தமுடியாது. கடன் என்பதே மறு காலனியாதிக்கத்தின் ஒரு பகுதிதான். நம்மை அவர்களது காலனிகளாகவே தொடர்ந்து வைத்திருப்பதே கடனின் நோக்கம். கடனை வாங்கிவிட்டு, அடுத்த 50-60 ஆண்டுகள் அவர்களது பேச்சினை கேட்டுக்கொண்டே, நம்முடைய மக்களின் தேவைகளை புறக்கணிக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. கடனின் தற்போதைய வடிவமானது, ஆப்பிரிக்க கண்டத்தினை திட்டமிட்டு கைப்பற்றுவதற்குதான் வழிவகுக்கும். அதன்மூலம் நாம் அவர்களுடைய பொருளாதார அடிமைகளாக மாறிவிடுவோம்.

கடனை நம்மிடமிருந்து வசூலிக்கமுடியாமற்போனால், நம்மை ஆண்ட ஐரோப்பிய நாடுகள் உயிரிழந்துவிடமாட்டார்கள். ஆனால், நம்மீது சுமத்தப்பட்டிருக்கிற அளவுக்கதிகமான கடனை திருப்பிக்கொடுக்க நாம் முற்பட்டால், நம்முடைய மக்கள் உயிர்வாழ்வதே கடினமான ஒன்றாகிவிடும். நம்மைவைத்து பொருளாதார சூதாட்டம் விளையாடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்தக்கடனுக்கு நாம் பொறுப்பல்ல என்பதோடுமட்டுமல்லாமல், திருப்பிச் செலுத்தும் நிலையிலும் நாம் இல்லை. நம்முடைய நிலத்தையும் மக்களையும் இத்தனை ஆண்டுகளாக் சுரண்டியதற்கான கடனை அவர்கள்தானே திருப்பிச்செலுத்தவேண்டும்? 
இம்மாநாட்டின் மிகமுக்கியமான தீர்மானமாக இது இருக்க வேண்டும். எங்களது நாடான புர்கினா பாசோ மட்டுமே இக்கோரிக்கையினை வைக்கிறதென்றால், அடுத்த மாநாட்டில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம். ஆனால் இதுவே எல்லோருடைய கோரிக்கையாக மாறினால், நாம் ஒன்றுகூடி போராடி வெல்லலாம்."

வீழ்ச்சியை நோக்கி...

புர்கினா பாசோ வளர்ச்சிப் பாதையினை நோக்கி சென்றுகொண்டிருந்தாலும், ஏற்கனவே இருக்கிற அரசு நிர்வாகமானது ஊழல்மலிந்த ஒன்றாகத்தான் இருந்தது. காலம் காலமாக தன்னால் இயன்றவரை மக்களை சுரண்டியே கொழுத்து வாழ்ந்து கொண்டிருந்த உயர் அரசு நிர்வாகம், திடீரென தாமஸ் சங்கராவின் மக்கள்சார்ந்த திட்டங்களால் எரிச்சலடையத்தான் செய்தன. இதனால், ஆங்காங்கே அவர்கள் கிளர்ச்சிகள் செய்யத்துவங்கினர். ஒரு கட்டத்தில், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசிற்கு எதிராக குரல் கொடுக்கத்துவங்கினர். அவர்களையெல்லாம் பணியினைவிட்டு வெளியேற்றுவதைவிட வேறுவழியில்லாமல் போயிற்று தாமஸ் சங்கராவிற்கு.

இதனையே ஒரு காரணமாகக்காட்டி, புரட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு ஊழியர்களிடம் சங்கராவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யத்துவங்கினர். ஒரு கட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டத்தினை பேசித்தீர்க்கமுடியாமல், போராடிய ஆசிரியர்கள் அனைவரையும் வேலையைவிட்டு அனுப்பப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக வேறுவழியின்றி அதிக அனுபவமில்லாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இது ஒருபுறமிருக்க, புர்கினா பாசோ மக்களுக்கு சிறந்த வாழ்க்கையினை அமைத்துக்கொடுக்கவேண்டுமென்கிற தாமஸ் சங்கராவின் கனவினை அவருடன் இருந்த பலராலும் சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை. புதிதாக இராணுவத்தில் சேர்ந்த இளைஞர்களும், புரட்சி அரசினை கவிழ்க்க நடக்கிற சதிகளை முறியடிக்க அமைக்கப்பட்ட புரட்சிக்குழுக்களின் உறுப்பினர்கள் சிலரும், தாமஸ் சங்கராவையும் மக்கள் நலன் சார்ந்த அரசியலையும் விளங்கிக்கொள்ளவில்லை. அவர்களால் இங்கொன்றும் அங்கொன்றுமாக மக்களுக்கு பிரச்சனைகள் வரத்துவங்கின. இதனை தாமஸ் சங்கராவும் அறிந்து வைத்திருந்தார். தன்னால் இயன்றவரை எல்லோரிடமும் இதுகுறித்து பேசியும் வந்தார்.

1986 இல் பிரான்சில் நடந்த தேர்தலில், தீவிர வலதுசாரிக்கொள்கையுடைய கட்சியான 'ரேலி பார் தி ரிபப்ளிக்' நிறைய இடங்களில் வெற்றிபெற்று கூட்டணியாட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த ஜேக் சிராக் பிரெஞ்சு பிரதமராக பொறுப்பேற்றார். தீவிர வலதுசாரி ஆட்சியமைந்ததும், பிரெஞ்சு அரசு ஆப்பிரிக்காவில் தனக்கான ஆதரவு நாடுகளைவைத்து எதிர்ப்பு நாடுகளையும் முன்னெப்போதையும்விட துரிதமாக செயல்பட்டு தன்வலையில் விழவைக்க முயற்சியெடுத்தது. பிரெஞ்சு அரசிற்கு மிகவும் விசுவாசமாக இருந்துவந்த ஐவரி கொஸ்டின் அதிபர் பெளிக்சின் உதவியுடன், புர்கினா பாசோவிலிருக்கும் தாமஸ் சங்கராவின் ஆட்சியினை கவிழ்க்க திட்டம் தீட்டப்பட்டன. தாமஸ் சங்கராவின் மிக நெருங்கிய நண்பரும் புர்கினா பாசோ அரசில் அதிபருக்கு அடுத்தபடியான பொறுப்பிலிருந்தவருமான ப்ளேயிஸ் கம்பேரோவை தங்களது சதித்திட்டத்தில் விழவைத்தனர்.
தாமஸ் சங்கராவின் கட்டளைக்கிணங்க எளிமையான வாழ்க்கைக்கு திரும்பிய அமைச்சர்கள் சிலர், மீண்டும் பழைய வசதியான வாழ்க்கை கிடைக்கவேண்டுமென்பதற்காக ப்ளேயிஸ் கம்பேரோவிற்கு உதவிசெய்ய முன்வந்தனர்.

என்ன நடக்குமோ! ஏது நடக்குமோ! என்று நாட்டில் குழப்பமான சூழல் உருவாகியது. சே குவேராவின் இருபதாவது ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்துகொண்டபிறகு, "சே குவேரா 39 வயதில் உயிரிழந்தார். நான் அந்த வயது வரைகூட இருப்பேனா எனத்தெரியவில்லை" என்றும்  "புரட்சியாளர்களை படுகொலைசெய்தாலும், அவர்களது இலட்சியங்களை அழிக்கமுடியாது" என்றும் சுவிசர்லாந்து சோசலிஸ்டான ஜீன் சீக்லரிடம் சொல்லியிருக்கிறார்.

1987 அக்டோபர் 17 இல், அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அரசின் ஆதரவுடன் ப்ளேயிஸ் கம்பேரோ தன்னுடைய குழுவினருடன், தாமஸ் சங்கரா மற்றும் 12 உயரதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். தாமஸ் சங்கராவின் உடலை பல துண்டுகளாக வெட்டி யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டனர். சங்கராவின் மரண செய்தி நாடுமுழுக்க பரவியது. புர்கினா பாசோவின் மக்கள் தெருவெங்கும் நின்றுகொண்டு அழுதனர். அவர் இறந்தபோது, அவரது வீட்டினில் ஒரு கிதாரும், மோட்டார் சைக்கிளும் தான் அவரது சொத்துக்களாக இருந்தன.

புர்கினா பாசோ - இன்றைய நிலை...

தாமஸ் சங்காராவை கொன்றுவிட்டு, மறுநாளே அதிபராக பதவியேற்றுக்கொண்டார் ப்ளேயிஸ் கம்பேரோ. தாமஸ் சந்காரவின் ஆட்சியில் தேசியமயமாக்கப்பட்ட அனைத்தும் அரசிடமிருந்து விடுவிக்கப்பட்டன. ஐ.எம்.எப்.உடனும் உலக வங்கியுடனும் மீண்டும் நட்புறவை புதுப்பித்துக்கொண்டது ப்ளேயிஸ் கம்பேரோவின் அரசு. மிகச்சிறந்த அதிபராகத் திகழ்கிறார் என்று பிரெஞ்சு அரசாங்கத்தின் பாராட்டையும் பெற்றுவிட்டார் ப்ளேயிஸ் கம்பேரோ. அதற்குப் பின்னால் நடைபெற்ற தேர்தலை, புர்கினா பாசோவின் 75 % மக்கள் ஒட்டுபோடாமல் புறக்கணித்தும், தன்னையே அதிபராக அறிவித்துக்கொண்டு ஆட்சியினைத் தொடர்ந்தார் ப்ளேயிஸ் கம்பேரோ. இன்றுவரை அவரே புர்கினா பாசோவின் அதிபராக இருக்கிறார்.
தாமஸ் சங்கராவின் ஆட்சியில், இரண்டே ஆண்டுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றநாடாக மாறியிருந்த புர்கினா பாசோ, கடந்த 25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய கடனாளி நாடுகளின் பட்டியலிலும், மிக மோசமான வறுமையிலிருக்கும் நாடுகளின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தின் வளங்களையும், மனித உழைப்பினையும் சுரண்டுவதற்கு ஏதுவாக, இப்படியொரு பொம்மை ஆட்சியும் ஊழல்மிகுந்த ஆட்சியாளர்களும் ஆப்பிரிக்காவினை ஆளவேண்டுமென்பதுதான் ஆதிக்க நாடுகளின் விருப்பம்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல், உலகளவில் உரக்க ஒலிக்கவேண்டியதன் அவசியத்தை புர்கினா பாசோ போன்ற நாடுகளின் வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன...
-இ.பா.சிந்தன் சிறைகளும் பணம் நிரப்பும் தொழில்தான், முதலாளிகளின் உலகில்...

Wednesday, February 29, 2012 1 commentsஊடகங்கள் நமக்குச்சொல்லிய செய்திகளை விடவும், சொல்லாமல் மறைத்த/மறந்த செய்திகள்தான் அதிக அளவில் அதிர்ச்சி தருவதாக இருக்கும். அதில் ஒன்றுதான் உலகம் முழுவதுமுள்ள கைதிகளின் எண்ணிக்கை.

உலகிலேயே அதிகளவிலான மக்களை கைதிகளாக சிறைபிடிக்கும் நாடு எது தெரியுமா? அமெரிக்காதான்.

இன்றைய தேதியில், உலகின் 25 சதவீதமான கைதிகள் அமெரிக்க சிறைகளில்தான் இருக்கிறார்கள்.
குழப்பங்களும் கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டுவரும் அடர்ந்த ஆப்பிரிக்க நாடுகளைவிடவும், பலமடங்கு சிறைக்கைதிகள் அமெரிக்காவில்தான் அதிகம்.

ஒரு புறம் மனித உரிமை குறித்து உலகெங்கிலும் பேசிவருகிற அதே அமெரிக்காவில்தான் உலகின் மூன்றில் ஒரு பங்கு சிறைக்கைதிகள் இருக்கிறார்கள். 100 இல் ஒரு அமெரிக்கர் என்கிற அளவில் அமெரிக்க மக்கள் சிறையில் இருக்கிறார்கள். அதாவது 23 லட்சத்திற்கும் மேலான மக்கள் சிறையில் இருக்கிறார்கள். சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையாகிற 70 சதவீதமான கைதிகள், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் சிறைக்கு வருகிறார்கள் என்று ஆய்வறிக்கை சொல்கிறது.

இலாபம் கிடைக்க எதுவேண்டுமானாலும் செய்யக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள், இதனையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?

சிறைச்சாலைகளையும் தனியார்மயமாக்கவேண்டுமென்று அமெரிக்க அரசை நிர்பந்திக்கத் துவங்கினார்கள். அதன் பலனாக, 1984 இல் அதிகாரப்பூர்வமாக சி.சி.ஏ என்கிற அமெரிக்க தனியார் நிறுவனத்திற்கு சிறைகளை நடத்த அமெரிக்க அரசு அனுமதியளித்தது. இன்று சுமார் ஒரு லட்சம் கைதிகளை கையாள்கிற வசதிகளைக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். ஜி.இ.ஓ. என்கிற நிறுவனம் சுமார் 50 ஆயிரம் கைதிகளை கையாள்கிற வசதிகளைக்கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய தனியார் சிறை நிறுவனங்கள் உருவாகத்துவங்கியிருக்கிறது.

கைதிகளால் இலாபம் வர ஆரம்பத்துவிட்டது. ஆனால் கைதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தால்தானே, தங்களுடைய இலாபமும்  ஆண்டுக்காண்டு பன்மடங்கு அதிகரிக்கும். அதனால் அமெரிக்க சட்டங்களை திருத்தியமைக்க முயற்சியெடுத்தன அந்நிறுவனங்கள். சட்டங்களை மிகக்கடுமையாக்கவும், புதிய குற்றப்பிரிவுகளை உருவாக்கவும், சிறிய குற்றங்களுக்குக்கூட தண்டனைகளின் கால அளவை அதிரிக்கவும், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 75 கோடி ரூபாயினை சி.சி.ஏ நிறுவனம் அரசிற்கும், அரசு சார்புடைய வாரியங்களுக்கும் லஞ்சமாக கொடுத்திருக்கிறது. அந்நிறுவனம் தவிர ஜி.இ.ஓ. நிறுவனமும் பல கோடிகளை லஞ்சமாக கொடுத்திருக்கிறது.

சட்டங்களை மாற்றி, சிறைக்கைதிகளை நிறைய பெற்றுக்கொண்டே இருந்தாலும், அத்தனியார் நிறுவனங்களின் இலாபம் கொழிக்கும் ஆசை மட்டும் குறைந்தபாடில்லை. அதனால் காவல் துறையினருக்கும் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அதிக அளவிலான பணத்தினை கொடுத்து, தங்களது சிறைகளுக்கு அதிக அளவிலான மக்கள் வருவதற்கு வழிவகை செய்தனர். உதாரணத்திற்கு, "கிட்ஸ் பார் காஷ்" மோசடியில் இரண்டு நீதிபதிகளுக்கு 13 கோடி ருபாய் பணத்தினை கொடுத்து, சிறைத்தண்டனை பெருமளவிற்கான குற்றங்கள் செய்யாத 2000 சிறுவர்களை தங்களது சிறைக்கு கைதிகளாக பெற்றுக்கொண்ட சம்பவமொன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கும் வந்திருக்கிறது. இவ்வாறு லஞ்சம் கொடுப்பதில்கூட சிறைநிறுவனங்களுக்குள் பெரும் போட்டிநிலவுகிறது.


கைதிகளின் மருத்துவ உதவிக்காகவென்று அரசிடமிருந்து பெறுகிற பணத்தினை செலவு செய்யாததால் ஏராளமான கைதிகள் சிறையிலேயே இறந்திருக்கிறார்கள். தனியார்மயமானால் அரசின் செலவு குறையும் என்று ஆரம்பத்தில் சொல்லிய அவர்கள், தற்போது அரசு சிறைகளைவிடவும் அதிகமாக செலவு வைக்கிறார்கள் அரசிற்கு... மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு, அதே மக்களை சிறையிலும் வைத்து இலாபம் சம்பாதிக்கிற இவர்களை என்னவென்று சொல்ல........

சிறைகளும் பணம் நிரப்பும் தொழில்தான், முதலாளிகளின் உலகில்...கார்ப்பரேட் கதை : "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து"

Friday, January 27, 2012 0 comments


இலாபம் வந்தபோதெல்லாம் அதனை தாமே வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக காலம்தள்ளிய அவ்வங்கியின் முதலாளிகள், 2008 இல் துவங்கிய நிதி நெருக்கடியின் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களை காப்பாற்ற வேண்டுமென்றார்கள். அரசாங்கமும் மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு வங்கியின் 84 சதவீத பங்குகளை வாங்கியது. இந்நெருக்கடியினால், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 34,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து".

ஆனால் இலாபம் வருகிறதோ இல்லையோ, தங்களுடைய வருமானத்தை குறைத்துக்கொள்ள விரும்பாத முதலாளிகள் எல்லா காலகட்டத்திலும் தங்களுடைய போனஸ், ஊதிய உயர்வு ஆகியவற்றை சரியாக எடுத்துக்கொண்டே இருந்தார்கள் வங்கியிலிருந்து.

34,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அதே காலகட்டத்தில்தான், அவ்வங்கியின் தலைமை அதிகாரி (ஸ்டீபன் ஹெஸ்டர்) போனசாக மட்டும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றிருக்கிறார்...

2010 இல் வங்கியின் 100 உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் போனசாக எடுத்துக்கொண்டார்கள்.

ஒரு பத்துநாட்களுக்கு முன்புதான், மேலும் 3500 பேரை வீட்டுக்கு அனுப்பும் முடிவினை அவ்வங்கி வெளியிட்டிருக்கிறது. இருந்தாலும் இப்போது மீண்டும் தலைமை அதிகாரி ஸ்டீபன் ஹெஸ்டருக்கு மேலும் பல கோடிகள் போனசாக அறிவித்திருக்கிறது வங்கி.

இவை யாவுமே மக்களின் வரிப்பணமே....

சுருக்கமாகச் சொல்வதானால்...

நிறுவனத்தில் அதிக இலாபம் வருகிறபோது அரசாங்கத்திடம் அந்தச்சலுகை இந்தச்சலுகையென்று (மக்களின் வரிப்பணத்தை) சலுகைகளாகப்பெற்று இலாபத்தை மேலும் மேலும் அதிகரித்துக்கொள்வதும், நிறுவனத்தில் இழப்பு ஏற்படுகிறபோது அரசாங்கப்பணத்தையே எடுத்து (மக்களின் வரிப்பணத்தை) தங்கள் இலாபத்தை குறையாமல் பார்த்துக்கொள்வதுமே தலையாய கடமையாகக் கார்ப்பரேட்டுகள் கருதுகிறார்கள்.... 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum