• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

பெண்களின் வலி!

Thursday, August 20, 2009 19 comments

(நாட்டுப்புறக்கதை)

ஆணா! பெண்ணா!
விடியுமுன்
விடைதெரியும்!

ஆண்குழந்தை பிறந்துவிட்டால்
அவதியில்லை அவநியிலே!
பெண்ணாகப் பிறந்தாலோ?
பாழாகிப்போகுமே
பொருள்சேர்த்தே என்னாயுள்!

ப்ரசவ அறை வெளியிலே
படுத்துறங்க இடமின்றி
தரையில் அமர்ந்தே
அரையுறக்கம் கண்டிருந்தேன்!


பெண்குழந்தை
பிறந்ததிப்போ!

ஐயகோ!
ஆண்குழந்தை வேண்டுமென
ஆயிரமாய் கோவில்குளம்
அன்றாடம் நடந்தேனே!

பெண்குழந்தை தந்தென்னை
பெருந்துயரில் தள்ளினாயே!

நாட்களும் நகர்ந்தன!

இரண்டாம் குழந்தையும்
பெண்தான்!

மூன்றும் நான்கும்
ஐந்தும் ஆறும்
அனைத்துமே பெண்தான்!

ஆறுபெற்றால்
அரசனும் ஆண்டியாவான்!
ஆண்டிநான் என்னசெய்ய!
ஆண்டவனே பதில்சொல்லேன்!

கண்மூடித்திறக்கையிலே
கண்ணீரைத்துடைத்துவிட்டு
காட்சிதந்தார் கடவுள்முன்னே!

“என்னவரம் வேண்டுமுனக்கு
என்னிடத்தில் கேள்” – என்றார்!

“ஆண்குழந்தை எனக்கொன்று
அழகாய் பிறக்கவேண்டும்!
அதுபோதும் கடவுளே!” – என
அழுதுகொண்டே வேண்டினேன்!

வரம்தந்து
விடைபெற்றார்
வான்வழியே கடவுள்!

மகிழ்ச்சியில் துள்ளுகையில்
மயங்கியே விழுந்துவிட்டேன்!

மருத்துவரும் வந்தமர்ந்து
என் வயிற்றில் குழந்தையென்றார்!

கடவுளே!
எனக்கு குழந்தை கேட்டால்
எனக்கே தந்துவிட்டாய்!
என்ன கொடுமையிது!

நிற்கவும் முடியவில்லை
நடக்கவும் இயலவில்லை!
வாந்தியும் மயக்கமும்தான்
வாடிக்கையாய் போனதிப்போ!

சிக்கனும் மட்டனும்
சிரிக்கிறதே எனைப்பார்த்து!
வாந்திவந்து துரத்துதே
வாயில்வைக்க நினைத்தாலும்!

மாதமொருமுறை
மருத்துவ சோதனை!
மாத்திரைகள் உண்கையில்
மனதிற்குள் வேதனை!

இலேசான தலைவலிக்கே
இரண்டுநாள் விடுப்பெடுப்பேன்!
தலைகீழாய் வலிக்கிறதே
எத்தனை நாள் ஓய்வெடுக்க!

வயிறுடன் சேர்ந்து
வலியும் வளர்ந்து
நெருங்கியமாதம் ஒன்பது!

ப்ரசவஅறை பார்த்ததுமே
பாதியுயிர் என்னிலில்லை!

வலிபொறுக்கமுடியாமல்
விண்ணதிற அலறினேன்!

‘அம்மா’வென அலறிமுடிக்கையில்
அருகிலே கேட்டது அழுகைசத்தம்!

ஆணா பெண்ணா
அறிவதற்கு ஆர்வமில்லை!
அம்மையாகினேனோ
அப்பனாகினேனோ
ஆராய வழியில்லை!

பிறந்தது பெண்ணெனினும்
பிஞ்சுகுழந்தையின்
பஞ்சுகைகள் தொட்டே
பரவசம் அடைந்தேன்!

பத்துமாத சுமையிறக்கி
பெண்களின் வலியுணர்ந்தேன்!


தோன்றினார் கடவுள்!
“தவறிழைத்தேன் மகனே!
தருகிறேன் மீண்டும் ஒருவரமே!
நிச்சயம் பெறுவாய் ஒரு மகனை”

மீண்டுமா ………
மயங்கினேன் நான்!

"பொண்ணு பொறந்தாச்சி..........
பொண்ணு பொறந்தாச்சி.........."

தூக்கத்தைக்கலைத்து
தட்டியெழுப்பிய குரல்,
பெண்குழந்தை பிறந்ததென
பாராட்டிச்சென்றது!

ஓ!
கண்டதெல்லாம் கனவா!

மகளைப்பார்த்து
மகிழ்ச்சியில் திளைத்தேன்!
மனைவியைப்பார்த்து
பெருமிதமாய் உணர்ந்தேன்!



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum