விழிதிறந்து பார்க்கையில்
வெள்ளிக்கிழமை இன்றென்று
விரட்டியது நாட்காட்டி!
விரைந்தேன் அலுவலகம் நோக்கி!
வெள்ளிக்கிழமைகளில்
வாராந்திர திட்டப்பணிக்கூட்டம்!
நிரலர்கள் யாவரையும்
நிற்கவைத்து கேள்விகேட்க
கூட்ட அறைக்குள்
கூட்டமாய் வந்தது
பரிசோதிக்கும் குழுவொன்று!
பிழைப்பட்டியல் கையில் வைத்து,
பரபரப்பையும் கூட்டி நுழைந்தனர்!
மேலாளர் இருவரும்
முதுநிலை மேலாளரும்
சிரிப்புமறந்த முகங்களாய்
இருக்கையிலே வந்தமர்ந்தனர்!
"பல பிழைகள் இருக்கே உன் நிரலில்?"
பறந்து வந்தது முதல்கேள்வி!
"அது வந்துங்க......."
அதற்குள் அடுத்த கேள்வி,
"இந்த பிழைக்கு எப்போது பிழைதிருத்தம் தருவாய்?"
"இது வந்துங்க........."
வேறு திசையிலிருந்து மற்றொரு கேள்வி,
"சென்ற வாரம் என்ன செய்தாய்?"
"வித்யாசமான வேலையேதும் செய்திருக்கிறாயா?"
"சென்ற ஞாயிறு ஏன் அலுவலகம் வரவில்லை?"
கேள்விகளை நீ கேட்கிறாயா
அல்லது நான் கேட்கட்டுமா - என்கிற
கேள்விக்கே இடமின்றி,
கேள்விக்கணைகள் நாட்புறமிருந்தும்
காதுகளை பதம் பார்க்க,
கதறி அழுதேன் எனக்குள்ளே!
சிக்கிட்டான்யா சீக்காழி- என
சுக்குநூறாய் அறைக்குள் நான்!
காதோரம் குருதிவழிய
கூட்டம்முடிந்து வெளியே வந்தேன்!
ஆறுமாதமாய் மாறாதவேலை!
ஏச்சுக்களும் பேச்சுக்களும்
எப்போதும் போல!
வேலையோ வேலையின்று!
வீட்டிற்கு கிளம்பினேன்!
கோயம்பேடு சிக்னல்,
கோபப்படவைத்ததென்னை!
வடபழனி சிக்னல்,
வெறுப்பேற்றியதென்னை!
வியர்த்து விறுவிறுத்து
வீடு வந்து சேர்ந்தேன்!
காலணியை கழற்றுகையில்
காதிலே விழுந்த வசனங்கள்!
"இருபது வருடமாய் காபி போடுற
இன்னுமா ஒழுங்கா போடத்தெரியல!"
இது என் அப்பா!
"வரும் ஞாயிறு நண்பர்கள் வராங்க
விருந்துக்கு ஏற்பாடு செய்"
இதுவும் அப்பாதான்!
"எப்ப பாத்தாலும் இதே கொழம்புதானாம்மா
ஏதாவது வித்யாசமா வெக்கத்தெரியாதா?"
இது என் அண்ணன்!
ஆணையிட்டோம் அதிரடியாய்
சிறுதுளியும் சிரிப்பின்றி!
"வேலையோ வேலையின்று"
வசனம்கேட்க காத்திருந்தேன்,
சமையலறை அருகில் நின்றே!
இருபதாண்டாய் வந்ததில்லை!
இப்போதும் அப்படித்தான்!
