• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

ஆகஸ்ட் மாத பேஸ்புக் சுவரெழுத்துகளில் சில....

Wednesday, August 31, 2011 0 comments


மரணதண்டனை அமலில் இருக்கும் நாடுகளைவிடவும், மரணதண்டனையை நீக்கிவிட்ட நாடுகளில்தான் குற்றங்களும் கொலைகளும் குறைவாக நடைபெறுவதாக ஆய்வுகள் சொல்கின்றன... தண்டனைகளை கடுமையாக்குவதாலெல்லாம் குற்றங்களை குறைத்துவிடமுடியாது....

பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் என்று பட்டியலை தயாரித்து வைத்துக்கொண்டு சகமனிதர்களைக் கொல்லத்துடிக்கும் மரணதண்டனைச்சட்டத்தை இல்லாமல் செய்துவிட மிக வலிமையாகக் குரல்கொடுப்பதற்கான சரியான தருணம் இதுவே...

தாராளமான, எல்லைகளற்ற தனியார்மயம் நமக்களித்திருக்கிற கார்ப்போரேட்கள் அரசாளும் வழிமுறையில், ஊழல் என்பது அரசின் கொள்கையாகவே மாறிவிட்டது. அதனை சரிசெய்யாமல், 'ஊழல்' 'ஊழல்' என்று கத்துவதாலேயோ, சட்டமொன்று கொண்டுவந்தால் சரியாகிவிடும் எல்லாம் என்று சத்தம்போடுவதாலேயோ ஊழலை ஒழித்துவிடமுடியாது

அமெரிக்காவில், AT&T நிறுவனமும் T-Mobile நிறுவனமும் இணைந்தால்தான் 97 % அமெரிக்க மக்களை சென்றடைய முடியும் என்று ஒரு பொய்யைச்சொல்லி இணைதல்வேலையைத்துவங்கினார்கள்....
ஆனால் அப்படியெல்லாம் 97 % மக்களை சென்றடைகிற விரிவாக்கத்திட்டமெல்லாம் எதுவுமே இல்லை என்று அந்நிறுவன வக்கீல்களால் எழுதப்பட்ட இரகசியக்கோப்பு வெளியாகியிருக்கிறது...

இந்த இணைதலின் மூலம், 20000 தொழிலாளர்களை வீட்டுக்கனுப்புவதுதான் அவர்களது நோக்கம்...

நேற்று காலையில், சில மின்னஞ்சல் முகவரிகளும் கையெழுத்துகளும் நிரப்பப்பட்ட தாளொன்றினை நீட்டினான் இளைஞனொருவன்.

மெல்லிய சிரிப்பினை உதிர்த்துவிட்டு, "இதுல கையெழுத்து போடுங்க... நம்ம பிரதமருக்கு அனுப்புவோம்... ஊழலை ஒழித்து புரட்சியை உண்டாக்குவோம்" என்றான் ஊழலின் மூலவேர்களை பிடுங்காமல் ஊழலை ஒழிக்கமுடியுமுடியாதென அறியாதவனாக....

அவனது ஆர்வத்தை தடுக்க மனமின்றி, இல்லாத மின்னஞ்சலையும் அறியாத கையெழுத்தையும் போட்டுக்கொடுத்தேன்...

புரட்சியென்பது இத்தனை எளிதாக இருக்குமென முன்பே தெரிந்திருந்தால்......

உலகின் மற்ற ஏழை நாடுகளை சுரண்டிச்சுரண்டியே கொழுத்துப்போன அமெரிக்க முதலாளித்துவமே இவ்வளவு எளிதாக வீழ்கிறதென்றால், சொந்த நாட்டு மக்களைச்சுரண்டியே கொழுத்துக்கொண்டிருக்கிற இந்திய முதலாளித்துவம் வீழ்ந்து அதளபாதாளத்திற்கு செல்லும் நாள் வெகுதொலைவிலில்லை என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை... அதே நேரத்தில், தானாக வீழ்கிற முதலாளித்துவம், நிச்சயமாக வேறு வேறு வடிவத்தில் மீண்டு வந்து மீண்டும் சுரண்டவே முயற்சிக்கும் என்பதையும் சுரண்டப்படுகிறவர்கள் உணரவேண்டிய நேரமிது...

தற்செயலாக பார்த்த ஒரு தொலைக்காட்சித்தொடரில் (கனா காணும் காலங்கள்), பொறியியல் கல்லூரியில் மாணவர்களில் ஒருவன் பேசிய வசனம்:

"இந்தியாவுக்கு காந்தி தாத்தா சுதந்திரம் வாங்கித்தந்தது இஞ்சினியரிங் காலேஜிகளுக்கும் சேத்துதானடா.... ஆனா நம்மள மட்டும் இன்னும் அடிமைகளை நடத்துற மாதிரியே நடத்துரானுங்க காலேஜில...."

தெய்வத்திருமகள் திரைப்படத்தின் பாடலொன்றில் வரும் வரிகள்....
விக்ரம் : "கதை சொல்லப்போறேன்.. கதை சொல்லப்போறேன்...."
விக்ரமின் நண்பர் : "கதையா???? சொல்லாத.... சொல்லாத... யாராவது திருடி படமா எடுத்துரப்போறாங்க....."
சுயவிமர்சன வரிகளா இவை???


வார்த்தைகள்கூட புலப்படாத வயதவளுக்கு!
வரைபடமாக மட்டுமே அறிந்த எழுத்துக்களை
'வா'வென துணைக்கழைத்து,
வாழ்த்துமடலொன்றை கிறுக்கித்தீட்டி
பிஞ்சுகைகளால் கைகுலுக்கிநீட்டியபோது,
வயதுகூடியது எனக்கல்ல,
அவளுக்கென்று புரிந்துகொண்டேன்...



அன்னா ஒழித்துவிட்ட ஊழல்....

Wednesday, August 24, 2011 0 comments

ஊழல் என்பது என்ன? அதன் மூலவேர்கள் எவை?
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலைத்தேடாமல், அல்லது நமக்கு வசதியான பதிலை வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்கள்.

வருடாவருடம் நாட்டின் பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று 'ஏழை' கார்பொரேட் நிறுவனங்களை வைத்திருக்கும் அம்பானிகளுக்கும் கும்பானிகளுக்கும் சலுகை அளிக்கப்படுகிறதே! அதற்கு நன்றிக்கடனாக, ஒவ்வொரு மந்திரிகள் நடத்தும் நிறுவனங்களிலும் ஒரு 1000 கோடி அம்பானி முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம் (கலைஞர் தொலைகாட்சி விவகாரத்திலும் இது நடந்ததுதான்). கார்பொரேட் நிறுவனங்களுக்கு சலுகையளிக்கப்படும் அந்த பல லட்சம் கோடி குறித்து அன்னாவின் ஆதரவாளர்கள் வாயே திறக்கமாட்டார்கள் என்பதுடன் ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று ஒரு வழிமுறையை அரசே தீர்மானிக்கிறது. அதனைப்பின்பற்றி, எந்தெந்த நிறுவனங்களுக்கு உரிமை வழங்கவேண்டுமென நினைத்தார்களோ அவர்களுக்கே வழங்கினார்கள் 2G விவகாரத்தில் (இதில் பெரிதும் பயனடைந்த அம்பானி, டாடா, அவனுட பாட்டா, ஆகியோரின் பெயர்களை அன்னாவின் ஆதரவு பிரச்சாரத்திலும் பார்க்கவில்லை. ஊழலை ஒழிப்போமென்று மின்னஞ்சல்களை அனுப்பித்தள்ளுகிறார்களே, அவற்றிலும் எங்கேயும் குறிப்பிடுவதில்லை). இப்போது ராசவைக்கேட்டால் என்ன சொல்கிறார்? 'இது அரசு பின்பற்றிவரும் வழிமுறைதான். அரசின் கொள்கைமுடிவு'.

பா.ஜ.க ஆட்சி செய்த காலத்தில், நாட்டின் சொத்துக்களை, அரசு நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்கென்றே ஒரு அமைச்சரே அமர்த்தப்பட்டார். அரசு நிறுவனங்களின் முதலீட்டை குறைத்து, நட்டக்கணக்கை காட்டி, இந்த நிறுவனம் தேறாது என்று முத்திரை குத்தி, அதனை தனியாருக்கு விற்பதுதான் அந்த அமைச்சரின் வேலை. இதில் யார் செய்தது ஊழல் என்பீர்கள்? அன்னாவின் ஆதரவாளர்கள் இதனை ஊழல் என்றே சொல்லமாட்டார்கள் என்பதுதான் உண்மை.

மக்களின் பி.எப். பணமான 4 லட்சம் கோடி ரூபாயினை ரிலையன்சிடமும் (ரிலையன்சின் பெயரில் ஒரு வங்கிகூட இல்லாதபோதும்) , ஹெச்.எஸ்.பி.சி. யிடமும், ஐ.சி.ஐ.சி.ஐ.யிடமும் கொண்டுபோய் கொடுத்து பங்குசந்தை சூதாட்டத்தில் விளையாடுங்கள் என்று அனுமதிகொடுத்ததை அன்னாவின் விசிறிகள் யாரும் ஊழல் என்றே சொல்லமாட்டார்கள்.

இதனை எப்படியாவது பயன்படுத்திக்கொண்டு, ஆட்சிக்கு வந்துவிடமென்று நினைத்து கூட்டம் சேர்க்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்து பயங்கரவாத கும்பலிற்கும், 'எப்படியோ பல பிரச்சனைகளின் வீரியத்தையும் மூலத்தையும் திசைதிருப்பியாயிற்றே, அது போதும்' என்று மகிழும் காங்கிரஸ் கூட்டத்திற்கும் மகிழ்ச்சிதான் இப்போராட்டம்.

ஜன லோக்பால் நிறைவேறினால், அதிகபட்சம் என்ன நடக்கும் தெரியுமா? லோக்பால் உறுப்பினர்களின் பொறுப்புகளை கார்ப்போரேட்டுகளின் பொம்மைகளோ அல்லது அந்தந்த ஊரின் சர்வாதிகார ரௌடிகளோ, அல்லது அரசின் அடியாட்களோ ஆக்கிரமித்துக்கொண்டு ஊழலினை இன்னும் ஜோராக மேலும் விஞ்ஞானப்பூர்வமாக நடத்துவார்கள்.

தாராளமான, எல்லைகளற்ற தனியார்மயம் நமக்களித்திருக்கிற கார்ப்போரேட்கள் அரசாளும் வழிமுறையில், ஊழல் என்பது அரசின் கொள்கையாகவே மாறிவிட்டது. அதனை சரிசெய்யாமல், 'ஊழல்' 'ஊழல்' என்று கத்துவதாலேயோ, சட்டமொன்று கொண்டுவந்தால் சரியாகிவிடும் எல்லாம் என்று சத்தம்போடுவதாலேயோ ஊழலை ஒழித்துவிடமுடியாது.



5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

Wednesday, August 3, 2011 0 comments


கோடைவிடுமுறை முடிந்து புதிய வகுப்பில் நுழைந்தபோது, சில புதிய முகங்களும் எனது வகுப்பில் சேரத்துவங்கியிருந்தன. இராகவனும் அப்படிச்சேர்ந்தவந்தான். அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல், அன்றே எங்களுடைய நட்புவட்டத்திற்குள் வந்துவிட்டான்.

"எங்க பழைய ஸ்கூல்ல எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணுவேன் தெரியுமா.... பாக்கெட்ல வேர்க்கடலய வெச்சிக்கிட்டு மிஸ்சுக்கே தெரியாம க்ளாஸ்லையே சாப்புடுவேன்... ஆபிஸ் ரூம்ல இருந்து நாலு சாக்பீஸ் கேட்டுவாங்கிட்டு வந்து அதுல ரெண்டதான் எங்க மிஸ்கிட்ட குடுப்பேன். மீதிய நான் பாக்கெட்ல போட்டுப்பேன். இந்த மாதிரி ஏகப்பட்ட வேலை பண்ணிருக்கேன் தெரிஞ்சுக்கோங்க.... நாந்தான் அங்க கிளாஸ் லீடராவும் இருந்தேன்" - இப்படி அள்ளிவீசிக்கொண்டே போனான்.

"எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

"அது என்னடா ஹாப்பி பர்த்டே போட்டி?" என்று கேள்வியெழுப்பினோம்.

"அது ஒன்னும் இல்லடா... யாரோட ஹாப்பி பர்த்டே அன்னிக்கி அதிகமா 'ஹாப்பி பர்த்டே' விஷ் கெடைக்கிதோ, அவங்கதான் அந்த போட்டில ஜெயிப்பாங்க. அடுத்ததா வேற யாராவது அதவிட அதிகமா விஷ் வாங்குறவரைக்கும் அவன்தான் வின்னர்... அதுல எப்பவுமே நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா!" என்றான்.

கேட்பதற்கே இப்போட்டி சுவாரசியமாக இருக்க, நாங்களும் அதனைத்துவங்க முடிவெடுத்தோம்.

"நீ எப்படிடா எப்பவுமே ஜெயிச்ச? எங்களுக்கு ஏதாவது ஐடியா குடேன்." என்று எங்களில் ஒருவன் கேட்டான்.

"எல்லாருக்கும் பைஸ்டார் சாக்லேட் குடுப்பேன். எங்க கிளாஸ் மட்டுமில்ல... தெரியாத பக்கத்துக்கிளாஸ் பசங்களுக்கும் குடுப்பேன். அப்போ எனக்குதான நெறைய விஷ் கெடைக்கும். அப்புடித்தான் நான் ஜெயிச்சிக்கிட்டே இருந்தேன்..." என்றபோது எனக்கு கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டது.

"என்னோட பொறந்தநாள் ஆகஸ்ட் 2 . அவங்கவங்க பொறந்தநாள்ல யாரு எவ்ளோ விஷ் வாங்குறாங்கன்னு எழுதி வெச்சிக்கலாம்" என்றான்.

நானும் அதே ஆகஸ்ட் 2 இல்தான் பிறந்தேன் என்பதால் உள்ளுக்குள் பயம் பலமடங்காக அதிகரித்தது. அன்று வீட்டிற்குச்சென்றதும் முதல்வேலையாக நாட்காட்டியை எடுத்துப்பார்த்தேன். ஆகஸ்ட் 2 - செவ்வாய்க்கிழமை. ஞாயிற்றுக்கிழமை என்றால்கூட தப்பித்துவிடலாம், செவ்வாய்க்கிழமை என்ன செய்வது என்று நாட்காட்டியிடம் கோபத்தைக்காட்டினேன். அப்பாவிடம் நாலணா 'ஆசை சாக்லேட்'டுக்கு மேல எதிர்பாக்கமுடியாது என்றெல்லாம் மனதுக்குள் எதையெதையோ நினைத்துக்குழம்பிக்கொண்டிருந்தேன். ஒரு யோசனை தோன்றியது. பிறந்தநாளன்று வயிறுவலி, காய்ச்சல் என்று எதையாவது சொல்லி விடுமுறை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.

நாட்கள் நகர நகர ஒவ்வொருவர் பிறந்தநாளாக வந்துசென்றுகொண்டிருந்தன. 38 , 43 , 62 இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் வாழ்த்து கிடைத்துக்கொண்டிருந்தது. நான் தப்பித்துக்கொள்வேன் என்கிற தைரியத்திலேயே இருந்தேன், மாதாந்திரத்தேர்வின் அட்டவணை வரும்வரை. ஆகஸ்ட் 2 இலும் ஒரு பாடத்திற்கான தேர்வு இருந்தது அட்டவணையில். தேர்விற்கும் படிக்கமுடியாமல், எப்போதும் பிறந்தநாள்குறித்தே நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆகஸ்ட் 2 காலையில் எழுந்திருக்கையில், அப்பா வாங்கிவைத்திருந்த 50 'ஆசை சாக்லெட்டுகளும்' என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. அப்பாவின் சக்திக்கு இதுவே அதிகமென்று எனக்குப்புரிந்தாலும், என்னால்தான் மகிழ்ச்சியை வரவைக்க இயலவில்லை.

வேண்டாவெறுப்பாக மிட்டாய்களையும், தேர்வட்டையையும், பையினில் வைத்துக்கொண்டு புறப்பட்டேன் பள்ளிக்கு. உள்ளே நுழையும்போதே சன்னலோரத்தில் அமர்ந்திருந்த இராகவன், தான் கொண்டுவந்திருந்த பைஸ்டார் மிட்டாய்களை வெளியே எடுத்துவைத்துக்கொண்டிருந்தான்.

மதியம்தான் தேர்வென்பதால், காலையில் பாடமெடுக்க வகுப்பிற்கு வந்தார் வகுப்பாசிரியை. வருகைப்பதிவேட்டினை எடுத்து மாணவர்களின் வருகையை பதிவு செய்துகொண்டிருந்த ஆசிரியை இருண்டு மூன்று முறை என் பெயரைச்சொல்லியும்கூட என் கவனம் முழுக்க பளபளவென மின்னிகொண்டிருந்த இராகவனின் மிட்டாய்கள்மீதுதான் இருந்தது.

"கவனமெல்லாம் எங்க இருக்கு?" என சற்றே அதட்டிக்கேட்ட ஆசிரியையிடம் "சாரி மிஸ்" என்று மன்னிப்புக்கேட்டுமுடிப்பதற்குள், "மிஸ்! சிந்தனை ஹெச்.எம் சார் கூப்புட்றாரு" என்று சொல்லிவிட்டுச்சென்றார் பள்ளித்தலைமையாசிரியரின் உதவியாளர்.

"சிந்தன்! ஹெச்.எம். கூப்புட்றாராம். போயி பாத்துட்டு வா..." என்ற வகுப்பாசிரியையிடம் சரியென்று தலையாட்டிவிட்டு தலைமையாசிரியரின் அறையை நோக்கி நடந்தேன்.

உள்ளே போகலாமா அல்லது அவரே என்னை அழைப்பாரா என்றெல்லாம் யோசித்துக்கொண்டே அரைமணி நேரத்திற்கும் மேலாக அறையின் வெளியே நின்றுகொண்டிருந்தேன். அறையைவிட்டு அவர் வெளியே வந்து, என்னை கவனிக்காமல் ஏதோ வகுப்பினை நோக்கி சென்றுகொண்டிருந்தார். சிறிதளவு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, "சார்.... சார்..." என்று மெல்லியகுரலில் விடாமல் அழைத்துக்கொண்டே அவர் பின்னாலேயே சென்றேன்.

சற்றுதூரத்தில் குரலைக்கேட்டு திரும்பியவர் என்முகத்தைக் கண்டதுமே,
"ஸ்கூல் தொறந்து 2 மாசமாச்சி. இன்னும் டேர்ம் பீஸ் கட்டல. புக் பீஸ்லயும் பாதி பேலன்ஸ் இருக்கு. எப்பதான் பீஸ் கட்டுவாரு உங்கப்பா? இப்பவே கிளாசுக்குப்போயி உன்னோட பையை எடுத்துட்டு வீட்டுக்கு கெளம்பு. பீஸ் கட்டினப்புரம் நீ ஸ்கூலுக்கு வந்தாப்போதும். இல்லனா உங்கப்பாவ வந்து உனக்கு டி.சி. வாங்கிட்டு போகச்சொல்லு..." என்று என்னிடத்திலிருந்து எவ்வித பதிலையும் எதிர்பாக்காமல் அவருடைய வேலையைத்தொடரச்சென்றுவிட்டார்.

அடக்கமுடியாமல் அழுகை பீரிட்டு வரத்துவங்கியது. என்னுடைய கண்ணீரே என்கால்களை கழுவிக்கொண்டிருந்தது. எனது சட்டையின் இடக்கை நனையும்வரை, நிற்காமல் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத்துடைத்தேன். யார் முகத்தினையும் பார்க்காமல் தலையை குனிந்தவாறே வகுப்பினில் நுழைந்து என்னுடைய இருக்கையிலிருந்த புத்தகத்தையும் சேர்த்து பையினில் எடுத்து வைத்துக்கொண்டு, "ஹெச்.எம். என்னைய பேக் எடுத்துட்டு வரச்சொன்னார் மிஸ்" என என் வகுப்பாசிரியையிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

வகுப்பின் வாசலைக்கடக்கிறபோது எனது வகுப்பினை மெதுவாக தலையுயர்த்திப்பார்த்தேன். எல்லோரும், 'சிந்தா, எங்கடா போற? எதுக்குடா போற?' என்ற கேள்விகளை கைகளாலும் கண்களாலும் கேட்டுக்கொண்டிருந்தனர். பார்வையை வகுப்பிலிருந்து விலக்கமுற்படுகையில், சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த இராகவன் என் கண்களில் பட்டுவிட்டான். போட்டியில் தோற்கவில்லை என்கிற எண்ணம் மெல்ல மேலெழ, கண்ணீர் சிந்துவதை குறைத்துக்கொள்ளத்துவங்கிய கண்களோடும்... சிறிதளவு அசைவுகளோடு சிரிக்கவும் முயற்சிசெய்துகொண்டிருந்த உதடுகளோடும் பள்ளியைவிட்டு வெளியேறலானேன்...



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum