• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

நான் அவனில்லை... (புனைவுச்சிறுகதை)

Tuesday, September 27, 2011 2 comments

நான் நின்றுகொண்டிருக்கும் இத்தெருவிற்கு வந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டது. ஓசி சோறும், வேலைசெய்யாமலெடுத்த ஓய்வும் என்தொப்பையினை ஒரு சுற்று பெருக்க வைத்திருப்பது உண்மைதான்.

"வாங்க வெளிய போகலாம்" என்று இழுத்துக்கொண்டே தெருவினைக்கடந்தும் என்கையை விடாமல் பிடித்துக்கொண்
டு வந்தான், எனக்கு இருப்பிடம் கொடுத்த ராமு.

"நாம எங்கப்பா போறோம்?" என்கிற கேள்வியை வழிநெடுக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். சிரிப்பைத்தவிர வேறெதுவும் பதிலாகத்தரவில்லை அவன். ஒவ்வொரு தெருவைத்தாண்டுகிறபோதும் மேலும் சிலர் எங்களுடன் சேர்
ந்துநடக்கத்துவங்கியது எனது குழப்பத்தை கூட்டத்தான் செய்தது. 'சரி, ஒரு எதிர்பாராத ஆச்சரியமாக இருந்துவிட்டுப்போகட்டுமே' என்று அதன்பிறகு நானும் எதுகுறித்தும் கேள்விகேட்காமல் அவர்களுடன் சென்றுகொண்டிருந்தேன்.

ஒரு பெரிய கட்டிடத்தின் அருகில் வந்ததும், கூட்டத்திலிருந்த ஒருவன் அரை செங்கலொன்றை அமைதியாக இருந்த அக்கட்டிடத்தினுள் எறிந்தான். அவனைத்தொடர்ந்து ராமு உட்பட வேறுபலரும் கையில் கிடைத்த கற்களை கட்டிடத்தை நோக்கி வீசினார்கள். என்ன நடக்கிறதென்றே விளங்கவில்லை எனக்கு. சில வினாடி மவுனத்திற்கு பிறகு குல்லாக்காரன் ஒருவன் மண்டையில் ரத்தம் சொட்டச்சொட்ட வாசலில் வந்துநின்று கத்திக்கூப்பாடு போட்டான். அவனுடைய குரலைக்கேட்டதும் சிலர் கம்புகளுடன் எங்களை நோக்கி ஓடிவந்தனர். ராமுவும் கூட்டத்தினரும் கையில் கிடைத்தவற்றையும் கொண்டுவந்தவற்றையும் ஓடிவந்தவர்கள் மீது வீசிக்கொண்டே ஓடினர். நானும்தான்.


கண்மூடித்தனமாக ஓடிவந்ததில் எல்லோருக்கும் சற்று அதிகமாகவே மூச்சிரைத்தது. இப்போது யாரும் எங்களைத்தொடரவில்லை. துரத்தியவர்கள் எங்களை மன்னித்து விட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். வியர்வையை துடைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து பார்க்கையில், மெரீனா கடற்கரையின் மணல்களும் அலைகளும் கண்களில் பட்டன. 'இதுதான் அந்த எதிர்பாராத ஆச்சரியமா' என்று வினவுவதைப்போல் ராமுவைப்பார்த்தேன். அவனும் 'ஆமாம்' என்பதுபோல் தலையசைத்தா
ன். இங்குதான் வரப்போகிறோம் என்பதை ஏற்கனவே அறிந்துவைத்தாற்போல் ஒட்டுமொத்த கூட்டமும் கடற்கரையினை நோக்கி மூச்சிரைப்பையும் மீறி மீண்டும் ஓடத்துவங்கியது. நானும் அப்பந்தையமில்லா ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினேன்.

பயத்தில் ஓடிவந்தபோது அமைதியாக இருந்த வயிறும், இப்போது பசியினால் ராகதாளத்
தோடு சேர்ந்திசை வாசிக்க ஆரம்பித்தது. என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் ராமு நீட்டிய சுண்டலை கையில் வாங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். சுண்டலைப்பறிப்பதற்கு யாரும் அருகில் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடத்தயாரானபோது, யாரென்றும் எங்கிருந்து வந்தார்களென்றும் அறிவதற்கு முன்னரே திரும்பிக்கூட பார்க்கவிடாமல் கழுத்தை அழுத்திப்பிடித்துக்கொண்டு வேகமாக கடலுக்குள் சில அடிதூரம் தள்ளிக்கொண்டே சென்றனர். என்னுடைய தலையை தண்ணீருக்குள்ளும் வலுக்கட்டாயமாக மூழ்கவைத்துவிட்டு ஓடிவிட்டனர். குல்லாக்காரர்களின் செயல்தான் இது என்று நான் உணர்ந்தவேளையில், நீச்சலறியாதவன் என்பதால் மூச்சுத்திணறிக்கொண்டிருந்தேன். இப்போது உயிர் பயம் என்னை ஆட்கொள்ளத்துவங்கிவிட்டது.

ஒட்டுமொத்த பலத்தையும் ஒருங்கிணைத்து, "காப்பாத்துங்க" "காப்பாத்துங்க" "காப்பாத்துங்க" என்று
உரக்கக்கத்தினேன். எனது குரலைக்கேட்டதும் கரையிலிருந்து சிறியபடகொன்றில் இருவர் என்னை நோக்கிவருவதுகண்டதும்தான் கத்துவதை நிறுத்தினேன். எனக்கு இரண்டடிதூரத்தில் வந்துவிட்ட படகிலிருந்த இருவரில் ஒருவன் ராமு என அறிந்ததும் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தேன். 

உதட்டில் சிரிப்பை பரப்பி வைத்திருந்த ராமு, படகிலிருந்து திடீரென ஒரு உருட்டுக்கட்டையினை எடுத்து என் மண்டையில் ஓங்கி அடித்தான். என் தலை சுக்குநூறாகிக்கொண்டிருக்கையில், "பிள்ளையார் சதுர்த்திக்கு வெச்ச பிள்ளயார முழுசா கரைக்காம வீட்டுக்கு போனா, வீட்டுக்கு ஆகாது... நல்ல வேளை.. பிள்ளையார ஒழுங்கா கரைச்சிட்டோம்" என்று அவர்கள் பேசியது என்காதுகளுக்கு நுழைகிற வேளையில், எவ்விதபலமும் இல்லாத வெறும் களிமண் என்பதால் நான் கடலினில் கரையத்துவங்கினேன்.



வியாபாரமாகும் உயர்கல்வி -1

Wednesday, September 21, 2011 3 comments


மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். நெருப்பினை உருவாக்குவது எப்படி என்று கண்டறிந்தவன் அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுத்த காலம் முதலே கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற தனியார்மயமும் வணிகமயமாக்கலும், கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும், எதனை கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் 'பணமே' தீர்மானிக்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உயர்கல்விக்கான "மொத்த சேர்க்கை விகிதம்" (Gross Enrolment Ratio ) உலக சராசரியை விடவும் பாதிக்கும் குறைவாகத்தான் இந்தியாவில் இருக்கிறது. அதாவது ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 11 க்கும் குறைவான குழந்தைகளுக்கே உயர்கல்வி எட்டும் கனியாக இருக்கிறது...
 
விஜயேந்தர் ஷர்மாவின் கட்டுரைகளில் இதுகுறித்த ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடப்பதால், சிலவற்றை தமிழாக்கம் செய்யும் முயற்சியில்....

அவரது வலைத்தளம் : http://vijendersharma.wordpress.com/about

100 கோடி மாணவர்களும், 5 கோடி ஆசிரியர்களும், பல ஆயிரம் கல்வி நிறுவனங்களும் ஒன்றிணைந்திருக்கிற கல்வித்துறையில் உலகளவில் 48,00,000 கோடி பணப்புழக்கம் இருக்குமென உத்தேசமாகக்கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் கல்வியில் மிகப்பெரிய வியாபாரம் ஒளிந்துகிடப்பதை கண்டறிந்துவிட்டனர் கார்ப்பரேட் முதலாளிகள். உலகளாவிய சந்தையைக்கொண்டிருக்கிற இத்தொழிலில், மாணவர்கள் நுகர்வோராகவும், ஆசிரியர்கள் சேவை வழங்குபவர்களாகவும், கல்வி நிறுவனங்கள் தொழில் நடத்தும் நிறுவனங்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மேலும் கற்பித்தலும்-கற்றலும் தேச வளர்ச்சியினை குறிக்கோளாகக்கொண்டிராமல் இலாபமீட்டும் தொழிலாக மட்டுமே உருவாகி வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் யாவும் உயர்கல்வியினை இலாபமீட்டும் நோக்கில் எப்போதும் குறிவைத்துக்கொண்டே இருக்கின்றன. கல்வி என்பது அரசின் கடமையாக இருந்தபோதிலும், பெரும்பாலான அரசாங்கங்கள் புதிய தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக கல்வியளிக்கிற பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன. தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல் மற்றும் கல்விநிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது போன்றவற்றின் மூலமாக இந்திய அரசாங்கமும் இதனை ஆதரித்தே வந்திருக்கிறது.

21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிலேயே உயர்கல்வியினை தனியார்மயமாக்குவதையும் வியாபாரமாக்குவதையும், உயர்கல்வியை காட்ஸ் (GATS ) ஒப்பந்தந்தின் கீழும் உலக வர்த்தக மையத்தின் கீழும் கொண்டுவருவதையும் எதிர்த்து மிகப்பெரிய அளவிலான மாணவர்-ஆசிரியர்-மக்கள் போராட்டங்களை இவ்வுலகம் கண்டிருக்கிறது. காட் மற்றும் உலக வர்த்தக மையம் ஆகியவை கல்வி போன்ற சேவையினை உலக அளவிலான சந்தையில் விற்பனைப்பொருளாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்படுகின்றன.

பாஜக ஆட்சியில் உயர்கல்வியின் தனியாமயமாக்கல்:
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்கல்விக்கான தேவையோடுதான் நாம் இருபதாம் நூற்றாண்டிற்குள் காலடியெடுத்துவைத்தோம். அத்தேவையினை பூர்த்திசெய்து நாட்டின் வளர்ச்சியினை உறுதிசெய்வதைவிடுத்து, பா.ஜ.க. அரசும் யூ.ஜி.சீ.யும் உலக வங்கியின் கட்டளைகளுக்கு அடிபணிவதிலும், கல்வியை வியாபாரமாக்க வேண்டுமென்கிற உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தங்களை கண்மூடித்தனமாக கைஎழுத்திடுவதிலுமே அக்கரையோடிருந்தது. உயர்கல்வியினை தனியார்மயமாக்கும்/வியாபாராமாக்கும் பொருட்டு, கல்விக்கட்டண உயர்வு, கல்வி நிறுவனங்களுக்கு எவ்விதக்கட்டுப்பாடுகளுமற்ற தன்னாட்சி அதிகாரம், நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களாவதற்கான விதிமுறைகள் தளர்த்தல் போன்ற முடிவுகளை எடுக்கத்துவங்கியது பா.ஜ.க. அரசாங்கம்.
 
"உயர் கல்வி நிறுவனங்கள் யாவும் கல்விக்கட்டணத்தினை உயர்த்தியும், தனியார் நன்கொடைகளை ஏற்றும், இன்ன பிற வழிமுறைகளை கண்டறிந்தும் தங்களுடைய தேவைகளைப்பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். உயர்கல்வியில் தனியார் முதலீடுகள், அரசின் சுமையைக்குறைக்கும்." என்று அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி 1998 இல் பாரிசில் நடந்த உயர்கல்விக்கான யுனெஸ்கோ மாநாட்டில் தனியார்மயத்திற்கு ஆதரவாகப்பேசினார்.

அம்பானி-பிர்லா அறிக்கை:

கல்வியை இலாபம் நிறைந்த சந்தையாகக்கருதி, முகேஷ் அம்பானியும் குமார் மங்கலம் பிர்லாவும் இணைந்து "கல்விச்சீர்திருத்த கொள்கை வரைவு" ஒன்றை பிரதமரின் கீழியங்கிய வர்த்தக-தொழில் குழுமத்திற்கு 2000 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் சமர்ப்பித்தார்கள். மாணவர்களிடமிருந்தே கல்விக்கட்டணத்தை முழுமையாக வசூலிக்கவும், உயர்கல்வியை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கவும் வழிவகுப்பதாகத்தான் இருந்தது அவர்களது அறிக்கை. அவ்வறிக்கையினை மட்டும் நடைமுறைப்படுத்தியிருந்தால் காசிருப்பவன் மட்டுமே உயர்கல்வி பயிலமுடியுமென்ற சூழல் முழுமையாக ஏற்பட்டிருக்கும்.

அம்பானிக்கும் பிர்லாவுக்கும் கல்வியில் இருக்கும் சந்தையினை கார்ப்பரேட்டுகளே கட்டியாள வேண்டுமென்பதே விருப்பம். அதனாலேயே கல்வி நிலையங்களில் எவ்வித அரசியல் செயல்பாடுகளும் இருக்கக்கூடாதென்றும், சங்கமமைக்கிற அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்கக்கூடாதென்று அறிக்கையில் கேட்டுக்கொண்டனர். இவ்வறிக்கையினை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மக்கள்யாவரும் பெரியளவில் விமர்சித்தனர்.

உலகவங்கியின் வழிகாட்டுதல்:
உயர்கல்வியினை தனியார்மயமாக்கும் நோக்கில் செயல்பட்ட உ.வ.மை.(உலக வர்த்த மையம்) மற்றும் காட்ஸ்(GATS ) ஆகியற்றுக்கு கிடைத்த கடும் எதிர்ப்பினால், உலக வங்கி வேறு வகையில் அதனை நிறைவேற்ற "அறிவார்ந்த சமூக உருவாக்கம்: புதிய சவால்கள்" என்றொரு அறிக்கையினை 2000 இல் வெளியிட்டது. கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டு, குறைந்தபட்ச தரத்துடன் புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் துவங்க அனுமதிக்கவேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களும் கூட மாணவர்களிடமிருந்தும் அவர்களின் பெற்றோரிடமிருந்தும் கட்டணமாக வசூலித்தும், வெளியிலிருந்து நன்கொடையாகப் பெற்றும் வருமானமீட்டிக்கொள்ளவேண்டுமென்று அறிவுறுத்துகிறது.
 
"உலக அளவிலான அறிவுசார் பொருளாதாரத்தின் தேவையை பூர்த்திசெய்யவும், மாறிவரும் தொழிலாளர் சந்தைக்காகவும், கல்விநிறுவனங்கள் புதுமையான வழிமுறைகளைக்கண்டறிய ஏதுவாகவும் ஒரு திட்ட வரைவினை உருவாக்க வேண்டும்" என்று வளரும் நாடுகளுக்கு உலக வங்கி அவ்வறிக்கையின் மூலமாக கேட்டுக்கொண்டது. உலக வங்கி தன் கட்டுப்பாட்டிலேயே அத்திட்டவரைவினை உருவாக்கி செயல்படுத்துவதனை உறுதி செய்யுமென நம்பிக்கை தெரிவித்தது. இதன்மூலம் உலக உயர்கல்வியை தனது காலடியின்கீழ் வைத்துக்கொள்ளும் திட்டம்தான் உலகவங்கிக்கு.

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான 'மாதிரிச்சட்டம்':

உலகமயத்தின் தேவைகளுக்கேற்ப உயர்கல்வித்துறையினை வடிவமைக்க வேண்டுமென வளரும் நாடுகளையெல்லாம் உலகவங்கி நெருக்கத்துவங்கியது. புதிய பொருளா தாரக்கொள்கைகளுக்கேற்ப அவை அமையுமென்ற நம்பிக்கையையும் அளித்திருப்பதால், பெரிய அளவிலான எதிர்ப்பும் தவிர்க்கப்படும் என்பது உலகவங்கியின் கணிப்பு.

இப்பின்னனியில்தான் உலகவங்கியின் நெருக்குதலுக்கிணங்க பா.ஜ.க. தலைமையிலான அரசு யூ.ஜி.சி. மூலமாக அக்டோபர் 2003 இல் "பல்கலைக்கலைக்கழகங்களை சிறப்பான எதிர்காலத்திற்காக தயார்செய்யும் நோக்கில் " என்கிற பார்வையில் "21 ஆம் நூற்றாண்டில் இந்தியப்பல்கலைக்கழங்களுக்கான முன்மாதிரிச்சட்டம் உருவாக்கும் பொருட்டு" என்னும் தலைப்பில் கருத்தாக்கக்கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

"'நிதியுதவி பெற்று ஆய்வு நடத்துதல்', 'அறிவுசார் ஆலோசனை வழங்குதல்', 'புத்தகங்கள்/ஆய்வறிக்கைகள் தயாரித்தல்/வெளியிடுதல்' போன்றவற்றை உலகின் மற்ற பல்கலைக்கழங்கள் போலவே இந்தியா பல்கலைக்கழகங்களும் ஏற்கனவே செய்யத்துவங்கிவிட்டன. அதே போல இன்னபிற உலக அளவிலான முன்னேற்றங்களையும் (குறிப்பாக தகவல் தொடர்பு தொழிற்நுட்பங்கள்) பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. பல்கலைக்கலைக்கழங்களின் எண்ணிக்கை, அணுகுமுறை, தரம் மற்றும் நிதி ஆகியவற்றில் இருக்கும் பிரச்சனைகள் இன்னமும் தொடர்ந்து இந்தியப்பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை பாதித்துக்கொண்டே இருக்கின்றன.

பல்கலைக்கழகங்கள் சிக்கல்கள் நிறைந்த நிறுவனங்களாக மாறிக்கொண்டிருப்பதால், சூழ்நிலைக்கேற்ப நடைமுறைச்சிக்கலற்ற நிர்வகிக்க எளிமையான வழிமுறைகளை உருவாக்குதல் அவசியமாகிறது. எனவே பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால்தான் உலகமயமாக்கலின் சவால்களை ஏற்றுக்கொண்டு உயர்தரத்திலான கல்வியை வழங்கமுடியும்."

புதிய பல்கலைக்கழக 'மாதிரிச் சட்டங்கள்' யாவும், தகவல் தொடர்பு தொழிற்நுட்பப் புரட்சியின் பலனைப்பெறுவதாகவும், தேசிய அளவிலும் உலக அளவிலும் உருவாகியிருக்கிற போட்டியினை சமாளிக்கும் விதமாகவும் இருக்குமென்றும், 2020 இல் இந்தியா ஒரு அறிவுசார் வல்லரசாக உதவுமென்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
'மாதிரிச்சட்டங்கள்' வழியாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை உயர்கல்வியில் நிகழும் உலக அளவிலான மாற்றங்களோடு ஒன்றிச்செல்லவும், சொந்தச்செலவிலேயே நிர்வாகத்தினை நடத்தவும், கல்வியினை ஒரு வியாபாரமாகவே நடத்தவும் தயார் செய்வதே யூ.ஜி.சி.யின் எண்ணம். மற்றுமொரு யூ.ஜி.சி.யின் ஆய்வறிக்கையில், "மானியமில்லாத பாடத்திட்டங்கள், தொழிற்கல்வி படிப்புகளுக்கு இரட்டைக்கட்டண முறை என இந்தியாவில் உயர்கல்வியானது ஏற்கனவே ஓரளவிற்கு தனியார்மயமாகிவிட்டது." என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'மாதிரிச்சட்டங்களின்' மூலமாக இந்தியாவிலிருக்கும் எல்லா உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும், இன்னபிற கல்வி நிறுவங்களுக்கும் மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தினை முழுவதுமாக நிறுத்தி, அவற்றையெல்லாம் உலகமயத்தின் ஓர் அங்கமாக மாற்றி, GATS -இல் செர்த்துவிட்டதால் ஏற்படும் விளைவுகளையும் அனுபவித்து, இலாபமோன்றே குறிக்கோளாகக்கொண்ட உலக கல்வி முதலாளிகளிடம் நாட்டின் உயர்கல்வித்துறையினை அடகுவைத்து, கல்வியும் ஒரு வியாபாரம்தான் என்பதனை நிலைநாட்டுவதே அரசின் நோக்கமாக இருந்தது. இதன் காரணமாக, மிக அதிகமான கட்டணங்களை செலுத்த இயலாத நிலையிலிருக்கும் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்திருக்கிற பிரிவு மக்களும் கீழ்நடுத்தர மக்களும் உயர்கல்வியிலிருந்தே விலக்கப்பட்டுவிடுவார்கள்

இது போன்ற ஒரு சூழலை உருவாக்கவே, பாஜக அரசும் யூ.ஜி.சி.யும் இணைந்து உயர்கல்விக்கான நிதியினை குறித்தும், மாணவர்களின்மீது சுமையினை திணிக்கவலியுறுத்தியும், கல்விக்கடன்களை திணித்தும், கல்வி நிறுவனங்களின் கட்டாய தரமதிப்பீடு நடத்தியும், கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்கியும், சுயநிதிக்கல்லூரிகள் துவங்க ஊக்கமளித்தும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத ஊழியர்களின் வேலைப்பளுவினை அதிகரித்தும், ஒப்பந்த ஆசிரியர்களை நியமிப்பதை ஊக்குவித்தும் உயர்கல்வியில் தனியார்மயத்தையும் வியாபார நோக்கத்தினையும் புகுத்தினார்கள்.

'மாதிரிச்சட்டங்கள்' செயல்வடிவத்திற்கு வந்தால், இருபத்தோராம் நூற்றாண்டில் சமச்சீரான உயர்கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதனை நன்கு புரிந்துகொள்ளமுடியும்.
நாட்டின் உயர்கல்வியினை ஒட்டுமொத்தமாக வியாபாரமாக்கும் நோக்கிலேயே பா.ஜ.க. தலைமையிலான அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே இத்தகைய "மாதிரிச்சட்டத்தினை" உருவாக்கி முன்மொழிந்தது. இக்கடுமையான சட்டத்திற்கெதிராக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என நாடுமுழுவதிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

ஐக்கிய முற்போக்குக்கூட்டணியின் (ஏ)மாற்றுத்திட்டங்கள்....
அடுத்த பகுதியில்........  
 



அமெரிக்காவின் 'அங்காடி தெரு' (பிரட் அண்ட் ரோசஸ் திரைப்படம்)

Monday, September 5, 2011 0 comments

'அமெரிக்கா ஒரு சொர்கபுரி' என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை.

டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் எந்தத்திரைப்படங்களும் அமெரிக்க உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை நமக்குச்சொல்லியதாக நினைவில்லை. பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்டியவர்கள், அதற்குள்ளே சுரண்டப்படுகிற மக்களின் உழைப்பை தெரிந்தே மறைத்தார்கள். 

கதைச்சுருக்கம்...
பிரட் அண்ட் ரோசெஸ் திரைப்படத்தின் கதை, கிட்டத்தட்ட நம்மவூர் 'அங்காடி தெரு' படம்போலத்தான். அங்காடி தெருவில் வறுமையில் வாடும் தென்தமிழ்நாட்டு மக்களை மிகக்குறைந்த கூலிக்கு சென்னை ரங்கநாதன் தெருவிலிருக்கும் கடைகளில் முறைசாரா வேலைகளுக்கு அமர்த்தப்பட்டு நவீன கொத்தடிமைகளாக்கப்படுவதை படமாக்கியிருப்பார்கள். அதேபோல வறுமையிலிருக்கும் தென்னமெரிக்க மக்களை சட்டவிரோதமான முறையில் உள்ளே வரச்செய்து (அல்லது கண்டுகொள்ளாமல் அனுமதித்து) அவர்களின் உழைப்பைச்சுரண்டுவதை கதைக்களமாகக்கொண்டதுதான் 'ப்ரெட் அண்ட் ரோசஸ்' திரைப்படம்.

 திரைக்கதை...
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் மாயா, ஏற்கனவே அங்கிருக்கும் தன் அக்கா ரோசாவின் உதவியால் அவள் வேலைபார்க்கும் தனியார் ஒப்பந்தத்துப்புரவு பணியாளர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறாள். முதலிரண்டுமாத ஊதியத்தை தனக்குக்கொடுத்துவிட வேண்டுமென்று ஒப்பந்ததாரரின் நிபந்தனைக்குட்பட்டே சேர்க்கப்படுகிறாள்.

நிமிடமொன்று தாமதாக வேலைக்கு வந்தாலும் கடும் தண்டனை, யாரும் யாரோடும் பேசக்கூடாது, மருத்துவக்காப்பீடு இல்லை, மிகமிகக்குறைந்த ஊதியம், சங்கமமைக்கும் உரிமையின்மை, எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்கிற நிலை ஆகியவற்றைக்கண்டு மாயா ஆடித்தான் போகிறாள். அங்கு வேலை செய்யும் எல்லாருக்கும் கோபம் இருப்பினும், என்ன செய்வதென்று தெரியாமலே தொடர்கிறார்கள்.

அப்போதுதான் சாம் என்பவன் இரவு வேளைகளில் ரகசியமாக அந்நிறுவன ஊழியர்களைச்சந்தித்து சங்கம் அமைப்பதன் அவசியம் குறித்து பேசுகிறான். சங்கம் இருக்கிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சங்கமில்லாத நிருவனகளில் இருக்கும் ஊழியர்களைவிடவும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்கள் என்றும் பேசுகிறான். மாயா அவனது கருத்தின்பால் ஈர்க்கப்படுகிறாள். சாம் ஒரு ஆலோசனை சொல்கிறான். அந்நிறுவன உயரதிகாரிகளின் விருந்து நிகழ்ச்சியொன்றில் உள்ளே புகுந்து எல்லா ஊடகங்களும் குழுமியிருக்கும்போது அந்நிறுவனத்தின் வண்டவாளங்களைப் பேசினால், உண்மைநிலையினை உலகறியச்செய்யலாம் என்பதுதான் அத்திட்டம்.

பலரும் இப்போராட்டத்திற்கு உதவ முன்வரும்போது, மாயாவிற்கு நெருக்கமான ரூபன் என்பவன் இச்செயலுக்கு உதவமுடியாது என்று மறுத்துவிடுகிறான். அவனுக்கு அமெரிக்காவிலேயே கல்லூரியில் சேர்ந்து படிக்கும் எண்ணமிருப்பதாகவும் இப்போராட்டத்தால் அவனுக்கு கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டுவிடும் என்றும் சொல்லி அவன் விலகுகிறான். அதற்கு மாயா அவனிடம்,

"என்னோட அக்கா தினமும் 16 மணிநேரம் வேலை செய்யிறா. ஏன்னா அவளோட கணவருக்கு மருத்துவ செலவு செய்யிறதுக்குதான். 4 கோடி மக்களுக்கும் மேல மருத்துவக்காப்பீடே இல்லாத, உலகத்தின் பணக்கார நாடான இந்த அமெரிக்காவுல அவருக்கும் இதே நிலைமைதான்.

இந்த போராட்டத்தில் நான் ஏன் கலந்து கொள்கிறேன்? ஒரு வேலைக்காக நம்மளோட 2 மாத ஊதியத்தை இவர்களுக்கு தண்டம் அழவேண்டியிருக்கிறது... நம்மளோட உழைப்பில் இவங்க உக்காந்து சாப்புடுறாங்க... இவங்களோட அசுத்துங்களை நாமதான் கழுவி சுத்தம் பண்றோம்.... இன்னும் இவங்களுக்காக எல்லாமும் செய்றோம்.... ஆனா நமக்கு என்ன கிடைத்தது? நானும் உன்னைமாதிரி ஒருநாள் படிக்கப்போவேன்...  ஆனால் அதற்குமுன்னர் இதையெல்லாம் மாற்றாமல் நான் படிக்கப்போறதில் என்ன பயன் சொல்லு?" என்கிறாள் மாயா.

சாம் மற்றும் சில தோழர்கள் மாயா போன்ற தொழிலாகளின் உதவியோடு யாருக்கும் தெரியாமல் அவ்விருந்து நடைபெறும் இடத்திற்குள் நுழைந்து, திட்டப்படி தங்கள் கருத்தினை ஆணித்தரமாக பதிவு செய்துவிடுகிறார்கள். இச்செய்தி உடனே நாடெங்கும் பரவுகிறது.

மறுநாள் நிர்வாக அதிகாரி, கடும் வார்த்தைகளால் எல்லா ஊழியர்களையும் திட்டித்தீர்த்துவிட்டு பட்டியல் போட்டு பலரை வேலையை விட்டு அனுப்பிவிடுகிறான். அப்பட்டியலில் மாயாவின் பெயருக்கு பதிலாக ரூபனின் பெயர் இருக்கிறது. மாயாவின் அக்கா ரோசாதான் எல்லோரையும் காட்டிக்கொடுத்திருக்கிறாள் என்று தெரியவர அவள் ரோசாவின் மீது கடும் கோபம் கொள்கிறாள்.

ரோசாவிடம் மாயா, 'இப்படி விலை போய்விட்டாயே' என்று கோபம் கொப்பளிக்கக்கத்துகிறாள். அதற்கு ரோசா, 'நம்ம அப்பா நம்மள விட்டுட்டு ஓடிப்போனதில் இருந்து, இத்தனை வருடங்களாக நான் எப்படி அமெரிக்காவில் இந்த 5 டாலர் ஊதியத்தை வைத்து மெக்சிகோவிலிருந்த உனக்கும், அம்மாவிற்கும் பணம் அனுப்பினேன் தெரியுமா? இந்த குறைந்த ஊதியத்தை வைத்து, நோய்வாய்ப்பட்ட கணவரை வெச்சிகிட்டு, குழந்தைகளையும் வெச்சிக்கிட்டு எப்படி காலம் தள்ளினேன் தெரியுமா? என்னைக்காவது கேட்டிருக்கிறாயா? எத்தனை காலத்துக்குதான் என்னுடைய உடலையே நான் விற்றுக்கொண்டிருப்பது?' என்ற ரோசாவின் அழுகுரலைக்கேட்டு மாயாவும் கண்ணீரோடு வெளியேறுகிறாள்.

சாமுடன் சேர்ந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்களையும் ஒன்றிணைத்து, பேரும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கிறாள் மாயா. பெண்களே பெரும்பாலும் அப்போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.

'வேலை பறிக்கப்பட்ட எல்லாருக்கும் மீண்டும் வேலை'
'நியாயமான ஊதியம்'
'உறுதியான மருத்துவக்காப்பீடு'
'வேலையில் மரியாதையாக நடத்தவேண்டும்'
போன்றவற்றை கோரிக்கைகளாக வைத்து ஒட்டுமொத்த ஊழியர்களும் நிறுவனத்தின் உள்ளேசென்று உள்ளிருப்பு போராட்டத்தினை துவங்குகிறார்கள்.ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் விளைவாக, இறுதியாக நிறுவனம் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்கிறது.
 
மாயாவை மட்டும் காவல்துறையினர் பழைய வழக்கொன்றினை தூசித்தட்டியெடுத்து இனி அமெரிக்கா பக்கமே வரக்கூடாதென்று எச்சரித்து அவளை நாட்டை விட்டே வெளியேற்றுகிறது. காவல்துறை வாகனம் மெல்ல நகர, வெளியே நின்றுகொண்டிருக்கும் சாம், தன் அக்கா ரோசா, சக ஊழியர்கள் எல்லோரையும் பார்த்து கையசைத்துக்கொண்டே செல்கிறாள்....



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum